எம்புரான் படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம் - புதிய பதிப்பு இன்று வெளியீடு!
மலையாள நடிகர் பிரித்விராஜ் இயக்கம் மற்றும் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான படம் ‘லூசிஃபர்’. இப்படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பால் `எல்2; எம்புரான்’ என்ற தலைப்பில் படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. இதில் பிரித்விராஜ் மற்றும் மோகன்லாலுடன் மஞ்சு வாரியர், பிரித்விராஜ், டோவினோ தாமஸ், ஷிவதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கடந்த 27ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான இப்படம் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. படத்தில் 2002 ஆம் ஆண்டு ஏற்பட்ட குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகள் இருப்பதாக கூறி சமூக வலைத் தளங்களில் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மோகன்லால் படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக கூறி மன்னிப்பு கோரி இருந்தார்.
இந்த நிலையில் எம்புரான் படம் திரையிடப்பட்டு வருகின்ற திரையரங்களில் இன்று முதல் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்ட படத்தின் புதிய பதிப்புகள் வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று மாலை இந்த பதிப்புகள் திரையரங்குகளுக்கு வழங்கப்பட்டு திரையிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.