சர்ச்சையை கிளப்பிய FIITJEE பொறியியல் நுழைவுத் தேர்வு பயிற்சி மைய விளம்பரம்!
பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்யும் பயிற்சி நிறுவனமான FIITJEE வெளியிட்ட விளம்பரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பொறியியல் மற்றும் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்விற்கு பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் நாடு முழுவதும் புற்றீசல் போல் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. இவை மாணவர்களுக்கு தீவிரமான பயிற்சி கொடுத்து போட்டித்தேர்வுகளுக்கு தயார்படுத்துவதாக பெற்றோர்களை நம்ப வைக்க அவ்வப்போது விநோதமான விளம்பரங்களை வெளியிடுகின்றன.
இது போன்ற பயிற்சி நிறுவனங்கள் மாணவர்களை மன அழுத்திற்கு ஆளாக்குகின்றன என்றும், பல நேரங்களில் மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளுகின்றன என்றும் கல்வியாளர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். ஆயினும் தங்கள் குழந்தைகளுக்கு முதல் தர கல்வி நிறுவனங்களில் அரசின் கல்வி உதவித்தொகையுடன் படிக்க வாய்ப்பு கிடைக்க இது போன்ற பயிற்சி நிறுவனங்களே ஒரே வாய்ப்பு எனக் கருதும் பெற்றோர் இவற்றில் தங்களது பிள்ளைகளை சேர்த்த வண்ணம் உள்ளனர்.
இப்படி இருக்க, பொறியியல் மற்றும் போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சி கொடுக்கும் நிறுவனங்களில் ஒன்றான FIITJEE, செய்திதாளில் வெளியிட்ட விளம்பரம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. அந்நிறுவனம் மாணவி ஒருவர் தனது நிறுவனத்தில் பயிற்சி பெற்ற நிலையில், ராஜஸ்தானின் கோட்டா நகரில் உள்ள பயிற்சி நிறுவனத்திற்கு மாறியதை விமர்சித்து விளம்பரம் வெளியிட்டதோடு, அந்த மாணவியின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.
இந்த வரம்பு மீறிய செயலுக்கு வருமான வரித்துறையை சேர்ந்த அதிகாரி காத்யாயனி சஞ்சய் பாட்டியா என்பவர் தனது ட்விட்டர் (X) தள பக்கத்தில் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
அதில், உங்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறியதற்காக ஒரு மாணவியின் புகைப்படத்தை வெளியிடுகிறீர்கள். ஒரு பெண் குழந்தையை இழிவுபடுத்தி நீங்கள் (FIITJEE) மேன்மையடையலாம் என நினைப்பது மிகவும் கீழ்தரமான மனநிலையை காட்டுகிறது. அதுமட்டுமில்லாமல் பயிற்சி மையங்களில் அழுத்தத்தால் உயிரை மாய்த்துக்கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையை கூட ஒப்பிட்டு விளம்பரம் வெளியிட்டிருப்பது மலிவான யுக்தி என விமர்சித்துள்ளார். அதோடு இந்த விவகாரத்தில் கல்வி அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் உரிய தீர்வு காண வேண்டும் என்றும் விளம்பரங்களை அரசு அமைப்புகள் கண்காணிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் காத்யாயனி சஞ்சய் பாட்டியாவின் கருத்து வைரலாகியுள்ள நிலையில், மாணவிக்கு ஆதரவாக பலர் தங்கள் கருத்துகளை சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்து வருகின்றனர்.