மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் மழை - சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை!
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் மழையின் காரணமாக சதுரகிரி கோயிலுக்கு பிரதோஷம் மற்றும் அமாவாசை வழிபாட்டிற்கு பக்தர்கள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்
பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி என்பது வழங்கப்பட்டு வருகிறது.
ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை முன்னிட்டு நாளை 10 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை பத்தர்கள் கோயிலுக்கு செல்ல கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக சதுரகிரி கோயிலுக்கு செல்லும் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதாலும், தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி அனுமதிக்கப்பட்ட நாட்களான இன்று முதல் 14 ஆம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாக வனத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் யாரும் சதுரகிரி கோயிலுக்கு வர வேண்டாம் எனவும் வனத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.