தொடர் கனமழை எதிரொலி | நெல்லையில் மின் தடை!
தொடர் கனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் 10 மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும் கனமழையால் சாலையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நேற்று காலையில் இருந்து திருநெல்வேலி மாவட்டத்தில் மேகமூட்டத்துடன் இருந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் தொடங்கிய மழை பகல் 1 மணி வரை பெய்தது.
திருநெல்வேலி சந்திப்பு, நகரம், பாளையங்கோட்டை, பெருமாள் புரம், புதிய பேருந்து நிலையம் போன்ற பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.வண்ணாரப்பேட்டை பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பெரும்பாலான சாலையில் குண்டும் குழியுமாக மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மேலும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தொடர் கனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.