தொடரும் தணிக்கை சான்றிதழ் சிக்கல்... எப்போது வெளியாகும் கங்கனாவின் #Emergency!
பாஜக எம்பி கங்கனா ரணாவத் இயக்கி, நடித்த 'எமர்ஜென்சி' திரைப்படம் குறித்து தணிக்கை குழுவுக்கு புதிய உத்தரவைப் பிறப்பிக்க, மும்பை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டதால் படவெளியீட்டில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.
திரைத்துறையில் இருந்து அரசியலுக்குள் நுழைந்து பாஜக எம்பியாக உள்ளவர் கங்கனா ரனாவத். மக்களவை தேர்தலில் இமாச்சல பிரதேச மாநிலம், மாண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அரசியல் வருகைக்கு பின் இவர் நடிப்பில் வெளிவரும் திரைப்படம் எமர்ஜென்சி.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அமல்படுத்திய 21 மாத அவசரநிலையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘எமர்ஜென்சி’. இந்தப் படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடித்துள்ளார். இந்தப் படம் நாளை வெளியாக இருந்தது. ஆனால் பல சர்ச்சைகளால் இந்த படத்திற்கு தற்போது வரை தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனார் இப்படம் இன்னும் வெளியாகவில்லை.
இதன் டீசர் கடந்த 14ஆம் தேதி வெளியானது. படத்தில் தங்கள் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலான காட்சிகள் இருப்பதாக சீக்கிய அமைப்பினர் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றம் நேற்று முன்தினம் விசாரித்தது. அப்போது, படத்துக்கான தணிக்கைச் சான்றிதழை இன்னும் அளிக்கவில்லை என்று மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் தெரிவித்தது.
இதனையடுத்து சீக்கியர்களின் ஆட்சேபத்தைப் பரிசீலித்து, செப்டம்பர் 18- ஆம் தேதிக்குள் சான்றிதழை அளிக்குமாறு மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து திரைப்படத்துக்குச் தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் படத் தயாரிப்பு நிறுவனமும், கங்கனா ரனாவத்தும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், “இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு இணையவழியில் சான்றிதழ் வழங்கியும், வாரியத் தலைவர் கையொப்பமிடாததால் அச்சான்றிதழ் ஏற்புடையதல்லை எனும் தணிக்கை குழுவின் வாதம் தவறானது என்றும் கூறினர். எனினும், இவ்விவகாரத்தில் மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு முரணாக தணிக்கை குழுவுக்கு புதிய உத்தரவைப் பிறப்பிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். இதனால் இப்படத்தின் வெளியீட்டில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.