#Manipur-ல் தொடரும் வன்முறை | தேர்வுகள் ஒத்திவைப்பு - பள்ளி-கல்லூரிகள் மூடல்!
மணிப்பூரில் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், பள்ளி-கல்லூரிகள் தொடா்ந்து மூடப்பட்டுள்ளன.
இந்தியாவின் வடக்கிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் 3ம் தேதி மெய்தி மற்றும் குக்கி ஆகிய இரு சமூகத்தினர் இடையே மோதல் உருவானது. இந்த மோதல் பெரும் கலவரமாக மாறி இரு தரப்பிலும் 200க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும், பல்லாயிரம் கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு இணையச் சேவை தடை செய்யப்பட்டது. பிறகு இணையச் சேவை கொடுத்த பிறகு உலகமே அதிர்ச்சிக்குள்ளாகும் வகையில் இரு பெண்கள் ஆடைகள் அற்று சாலையில் இழுத்து செல்லப்பட்டு வன்கொடுமை செய்யப்பட்ட வீடியோ வெளியாகியது. அதுவே அந்த மாநிலத்தின் கோர நிலைமையை மக்களுக்கு காட்டியது.
பிரேன் சிங் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வரும் மணிப்பூரில், மெய்தி மற்றும் குக்கி ஆகிய இரு சமூகங்களுக்கிடையே உருவான கலவரம், ஓராண்டை கடந்தும் நீடித்துவருகிறது. பல்வேறு தரப்பினரும் மத்திய அரசு தலையிட்டு, பிரச்சனையை முடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துவருகின்றனர். கடந்த ஆட்சி காலத்தின்போது எதிர்கட்சிகள், பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்ல வேண்டும் என வலுவாக கோரிக்கை வைத்தனர்.
ஆனால், இன்றுவரை அவர் மணிப்பூர் மாநிலத்திற்கு செல்லவில்லை. பிரதமர் மணிப்பூர் பற்றி நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என வலியுறுத்தியும் அதற்கான வாய்ப்பு ஏற்படாததால், எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து பிரதமரை நாடாளுமன்றத்தில் பேச வைத்தன. இந்த நிலையில் மணிப்பூரில் ஏற்பட்ட கலவரம் கொஞ்சம் கொஞ்சமாக தனிந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிவந்தனர். ஆனாலும், ஆங்காங்கே வன்முறை சம்பவங்களும், தாக்குதல் சம்பவங்களும் மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து வந்தது.
பெரும் கலவரத்திற்கு பிறகு சிறுசிறு தாக்குதல் சம்பவங்கள் நடந்துவந்த நிலையில், ஜிரிபாம் எனும் மாவட்டத்தில் கடந்த 7ம் தேதி மீண்டும் ஒரு வன்முறை சம்பவம் அரங்கேறியது. இதில், 6 நபர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதன் காரணமாக மீண்டும் அங்கு பதட்டநிலை உருவானது. எனவே மாநில முதல்வர் பிரேன் சிங், அந்த மாநில ஆளுநர் ஆச்சார்யாவை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டுவிட்டுவந்தார். இவர் ஆலோசனை மேற்கொண்டு திரும்பிய மறுநாள் மணிப்பூரில் டிரோன்கள், ராக்கெட் லாஞ்சர் உள்ளிட்ட அதிபயங்கர ஆயுதங்களால் தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. இதனால், மணிப்பூர் மாநில மக்கள் பயங்கர அச்சம் அடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட வலியுறுத்தியும், மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் மாணவர்கள் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியிலும் ஆங்காங்கே கலவரம் வெடித்தது. இப்படி தொடர்ந்து மணிப்பூரில் கலவரம் மூண்டுவரும் நிலையில், அந்த மாநிலத்தின் கிழக்கு மற்றும் மேற்கு இம்பால் உள்ள ஐந்து மாவட்டங்களில் முன்னதாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், மணிப்பூரில் மாணவா்கள் போராட்டம் எதிரொலியாக பள்ளி-கல்லூரிகள் தொடா்ந்து மூடப்பட்டுள்ளன. மேலும், மாநிலத்தில் நிலவும் சூழலை கருத்தில் கொண்டு, மணிப்பூா் பல்கலைக்கழக தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.