For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தொடரும் ரயில் விபத்துகள்... கடந்த ஓராண்டில் மட்டும் எவ்வளவு உயிரிழப்பு தெரியுமா? புள்ளி விவரம் கூறுவது என்ன?

02:02 AM Oct 12, 2024 IST | Web Editor
தொடரும் ரயில் விபத்துகள்    கடந்த ஓராண்டில் மட்டும் எவ்வளவு உயிரிழப்பு தெரியுமா  புள்ளி விவரம் கூறுவது என்ன
Advertisement

திருவள்ளூர் அருகே நடந்துள்ள ரயில் விபத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏதும் நடக்கவில்லை என்றாலும், தொடர்ந்து நடக்கும் ரயில் விபத்துகள் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. இந்நிலையில் அண்மையில் நடந்த விபத்துகளையும், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த விவரத்தையும் பார்க்கலாம்.

Advertisement

திருவள்ளூர் அருகே கவரப்பேட்டையில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது நேற்று இரவு 8:27 மணிக்கு பாக்மதி எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் மோதியதில், 12 பெட்டிகள் தடம் புரண்டன. சில பயணிகள் காயம் அடைந்தாலும், உயிரிழப்பு ஏதும் இல்லை என தெற்கு ரயில்வே உறுதி செய்தது.

இந்நிலையில் 2023-24 நிதியாண்டில், மொத்தம் 40 ரயில் விபத்துக்களில் 313 பயணிகள் மற்றும் நான்கு ரயில்வே ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர் என்று ரயில்வே அமைச்சகத்தின் தகவல் தெரிவிக்கிறது. இதன்படி, கடந்த பத்து ஆண்டுகளில் பதிவான இறப்புகளின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட பாதியளவு கடந்த ஓராண்டில் மட்டும் நிகழ்ந்திருப்பது உறுதியாகியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 638 ரயில் விபத்துகள் நடந்துள்ள நிலையில் மொத்தம் 719 பயணிகள் இறந்துள்ளனர். அதோடு 29 பணியாளர்களும் இறந்துள்ளனர்.

சமீபத்திய ஆண்டுகளில் நிகழ்ந்த சில முக்கிய ரயில் விபத்துகள் இங்கே:

காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் விபத்து (ஜூன் 17, 2024):

மேற்கு வங்கத்தில் ரங்கபாணி நிலையம் அருகே கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது சரக்கு ரயில் மோதியதில் பதினொரு பேர் இறந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் (ஜூன் 2, 2023):

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மோதியதில் கோர விபத்து நிகழ்ந்தது. இந்த மோதலின் விளைவாக சில பெட்டிகள் தடம் புரண்டது, பின்னர் அது யஷ்வந்த்பூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் மீதும் மோதியது. இந்த விபத்தில் 293 பேர் உயிரிழந்தனர். 1,200 பேர் காயமடைந்தனர்.

சரக்கு ரயில் விபத்து (மே 8, 2020):

ஹைதராபாத் அருகே உள்ள செர்லபள்ளி நிலையத்திலிருந்து நாசிக்கில் உள்ள பனேவாடி நிலையத்திற்கு சென்ற வெற்று சரக்கு ரயில் தண்டவாளத்தில் தூங்கிக் கொண்டிருந்த 16 தொழிலாளர்கள் மீது ஏறியது. லோகோ பைலட் தண்டவாளத்தில் படுத்திருந்த தொழிலாளர்களைக் கண்ட போதும், சரியான நேரத்தில் ரயிலை நிறுத்த முடியவில்லை. இவர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. அதோடு கொரோனா ஊரடங்கின் போது வீடு திரும்ப முயன்றவர்கள் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிகானர்-குவஹாத்தி எக்ஸ்பிரஸ் (ஜனவரி 13, 2022):

மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள டோமோஹானி பகுதியில் பிகானர்-குவஹாத்தி எக்ஸ்பிரஸின் 12 பெட்டிகள் தடம் புரண்டதில் 10 பயணிகள் உயிரிழந்தனர் மற்றும் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் (பிப்ரவரி 3, 2019):

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் டெல்லி நோக்கிச் சென்ற சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டதால் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் பலர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். தேய்மானம், சரியான பராமரிப்பு இல்லாதது, அரிப்பு போன்ற காரணங்களால் தண்டவாளத்தில் சேதம் ஏற்பட்டதால் இவ்விபத்து நடந்ததாக தகவல் வெளியானது

அமிர்தசரஸ் ரயில் விபத்து (அக்டோபர் 19, 2018):

அமிர்தசரஸில் தசரா கொண்டாட்டத்தின் போது, ​​ராட்சத ராவணன் உருவ பொம்மையை எரிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த போது தண்டவாளத்தில் நின்ற கூட்டத்தின் மீது வேகமாக வந்த ரயில் மோதியதில் கோர விபத்து ஏற்பட்டது. இரண்டு ரயில்கள் மோதியதில் 60 பேர் உயிரிழந்தனர். 74 பேர் காயமடைந்தனர். விழாவின் போது ஜலந்தர்-அமிர்தசரஸ் DMU தண்டவாளத்தை நெருங்கியபோது சுமார் 300 பேர் கொண்ட கூட்டம் பட்டாசு வெடிப்பதைக் காண கூடியிருந்தது. குறிப்பிடத்தக்கது.

இப்படி தொடர் விபத்துகள் நடந்தாலும், அவற்றை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் விபத்துகளும், உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருவதையே புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதை கவனத்தில் கொண்டு மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் வலியுறுத்தலாக உள்ளது.

Tags :
Advertisement