தொடரும் இஸ்ரேல் தாக்குதல்: காஸாவின் 25 மருத்துவமனைகளின் செயல்பாடுகள் முடக்கம்
காஸாவில் உள்ள 36 மருத்துவமனைகளில் 25 மருத்துவமனைகளின் செயல்பாடுகள் இஸ்ரேலின் தாக்குதலால் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் - காஸா இடையே கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய போரானது இதுவரையிலும் தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல், காஸா மீது தொடர் தாக்குதல்களை நடத்தி 18,000-க்கும் அதிகமான மக்களைக் கொன்று வருகிறது. இத் தாக்குதல்களில் மருத்துவமனைகளும் குறிவைக்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டது. அதற்கு பதிலளித்த இஸ்ரேல், காஸா மருத்துவரனைகளை பயங்கரவாத நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தி வருவதாக கூறியது. இந்நிலையில், இஸ்ரேலின் தாக்குதலால் காஸாவில் உள்ள 36 மருத்துவமனைகளில் 25 மருத்துவமனைகளின் செயல்பாடுகள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து ஐ.நா. பத்திரிகையாளர்கள் சந்திப்பில் உலக சுகாதார அமைப்பின் ரிச்சர்ட் பீப்பர்கார்ன் கூறியதாவது:
காஸாவிலுள்ள மருத்துவமனைகளில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவான அளவே மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. வெறும் 66 நாள்களிளேயே காஸாவின் சுகாதாரக் கட்டமைப்பு முற்றிலுமாக குலைக்கப்பட்டது. இதற்கு முன் செயல்பட்டு வந்த 36 மருத்துவமனைகளில் 25 மருத்துவமனைகள் செயல்பட முடியாமல் முடங்கியுள்ளன. வடக்கு காஸாவில் ஒன்று, தெற்கு காஸாவில் 10 என மொத்தம் 11 மருத்துவமனைகளே இயங்கி வருகின்றன.
அவையும் முழுமையாக இயங்கவில்லை. காஸாவில் நடத்தப்படும் தாக்குதலால் மருத்துவமனைகளும், பிற சுகாதாரக் கட்டமைப்புகளும் இதற்கு மேலும் நிலைகுலைந்தால் அது தாங்கமுடியாத துயரத்தை ஏற்படுத்தும். அத்தகைய கொடுமையான நிலை ஏற்படக்கூடாது என்று வேண்டுகிறோம் என்றார்.