கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன் படி இரவு நேரங்களில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.
தமிழ்நாட்டில் வரும் 27ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டது. அதிகபட்ச வெப்பநிலை 35° - 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° - 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இதனிடையே கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக நீலகிரி மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் குந்தா ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா உத்தரவிட்டுள்ளார்.