தொடரும் கனமழை - எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..?
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை பெய்து வருகிறது. முன்னதாக, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம், நெல்லை தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
அதேபோல, புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. இன்று மற்றும் நாளை கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்தமிழக கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் மாலத்தீவு கடற்பகுதிகளில் சூறாவளிக் காற்று வீச வாய்ப்புள்ளதால் வரும் 11-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் அதிகாலை முதல் பெய்து வரும் கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். தொடர் மழை காரணமாக கடலூர்,மயிலாடுதுறை,விழுப்புரம், திருவாரூர் , ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழை காரணமாக காரைக்கால், திருவண்ணாமலை, வேலூர் , ராணிப்பேட்டை, அரியலூர்,கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.