தொடர் விடுமுறை - குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!
பக்ரீத் பண்டிகை உள்ளிட்ட தொடர் விடுமுறையால் சுற்றுலா பயணிகள் குற்றால அருவிகளில் குவிந்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான குற்றால அருவிகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் தொடங்கும். இதனிடையே தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியுள்ள நிலையில் தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.
மேலும் முக்கிய நீர்த்தேக்கங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்தும் சீராக விழுகிறது. தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில், வார விடுமுறை மற்றும் பக்ரீத் பண்டிகை உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான சுற்றுலாபயணிகள் இன்று காலை முதலே குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளுக்கு சென்று ஆனந்த குளியலிட்டு வருகின்றனர்.