Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தலைமை தேர்தல் ஆணையருடன் ஆலோசனை - அரசியல் கட்சிகள் வலியுறுத்தியது என்ன?

12:02 PM Feb 23, 2024 IST | Jeni
Advertisement

அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இன்று ஆலோசனை நடத்தினார்.

Advertisement

மக்களவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து அரசியல் கட்சிகள்,  மாவட்ட ஆட்சியர்கள்,  காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான குழுவினர் சென்னையில் ஆலோசனை நடத்துகின்றனர்.  அந்த வகையில் இன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ராஜீவ் குமார் தலைமையிலான குழு ஆலோசனை நடத்தியது.

பாஜக,  காங்கிரஸ்,  பகுஜன் சமாஜ்,  ஆம் ஆத்மி,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,  இந்திய கம்யூனிஸ்ட்,  திமுக,  அதிமுக,  தேமுதிக,  தேசிய மக்கள் கட்சி ஆகிய 10 கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.  அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் இருந்து பரிந்துரைகள்,  கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பெற்றுக்கொண்டார்.

ஆம் ஆத்மி மாநில பொதுச்செயலாளர் ஜோசப் ராஜா

தலைமை தேர்தல் ஆணையருடனான ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆம் ஆத்மி மாநில பொதுச்செயலாளர் ஜோசப் ராஜா,  “60 சதவீதத்திற்கும் குறைவான வாக்குப்பதிவு நடைபெற்ற வாக்குச்சாவடிகளில் கவனம் செலுத்த கோரிக்கை வைத்துள்ளோம்.  கடந்த முறை தேர்தலின் போது ஒரு சில வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவில்லை.  புகார் தெரிவிப்பதற்கு ஒரே ஒரு கட்டுப்பாட்டு மையம் தான் இருந்தது.  இம்முறை மாவட்டம் தோறும் புகார் அளிப்பதற்கு ஏதுவாக கட்டுப்பாட்டு மையம் அமைக்க வலியுறுத்தியுள்ளோம்” என்று தெரிவித்தார்.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி

அதே போல் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் பேட்டியளித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,  “தேர்தல் ஆணையத்தின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தோம்.  கடந்த தேர்தலுக்கும் இந்த தேர்தலுக்கும் இருக்கும் வித்தியாசம் என்னவென்றால், வாக்குப்பதிவு இயந்திரத்திற்கும், மைய கட்டுப்பாட்டிற்கும் இடையில் விவிபேட் வைக்க வேண்டும் என்ற புதிய நிலை கொண்டு வந்துள்ளனர்.  இது சட்டத்திற்கு புறம்பானது. இடையில் விவிபேட் வைத்தால் 100% சதவிகிதம் துள்ளியமாக காட்டாது. அது மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தும்.

இதுபோன்ற வழிமுறை கையாண்டால் தவறுகள் நடக்க வாய்ப்பிருப்பதாக தேர்தல் ஆணையமே ஒப்புக்கொண்டுள்ளனர்.  தேர்தல் தொடர்பாக புகார் மனு அளித்தால்,  அதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்க மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். எத்தனை கட்டமாக தேர்தல் நடத்தினாலும் சந்திக்க தயாராக உள்ளோம்” என்று தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பி.சம்பத்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய குழு உறுப்பினர் பி.சம்பத்,  கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,  “ஒரே நாளில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். பல நாட்களாக நடத்தக் கூடாது என்று வலியுறுத்தினோம்.  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் தேர்தல் நடத்தப்படுவதால் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுகிறது.  இதனால் பொதுமக்களுக்கு சந்தேகம் வலுவாக உள்ளது.  வாக்களித்த பின் அதன் ரசீது வழங்கப்பட வேண்டும். நடுநிலையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.  தேர்தலில் பணப்பட்டுவாடாவை கண்காணிக்க வேண்டும்.  மதுரையில் நடைபெற்றதைப் போல தவறுகள் நடைபெறக் கூடாது” என்று கூறினார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “தேர்தல் ஜனநாயக முறையில்,  நியாமான தேர்தலாக நடத்தப்பட வேண்டும், வாக்காளர் பட்டியல் முரண்பாடுகளை சரி செய்ய வேண்டும்,  பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிந்து கூடுதல் பாதுகாப்பு போட வேண்டும்,  சுதந்திரமாக தேர்தல் நடத்துவதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தினோம். உள்ளூர் காவல்துறை ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது.  எனவே துணை ராணுவ படையை தேர்தல் பணிக்கு பயன்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.

தேமுதிக துணைச் செயலாளர் பார்த்தசாரதி

தேமுதிக சார்பில் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் துணைச் செயலாளர் பார்த்தசாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தேர்தல் ஒரே நாளில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.  ஆதார் அட்டையில் வாக்காளர் எண் இணைக்க வேண்டும் என்று தேமுதிகதான் முதலில் வலியுறுத்தியது.  அது முழுமையாக நடைபெறவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.  அதனை முழுமையாக நடத்தி முடிக்க வேண்டும்.  தேர்தல் நியாயமாக நடத்தப்பட வேண்டும். கள்ள ஓட்டு போடுவதை தவிர்க்க வேண்டும்.  ராணுவம் காவல் துறையும் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையரிடம் வலியுறுத்தியுள்ளோம்.  இதுவரையிலும் தேர்தல் கூட்டணி தொடர்பாக எந்த கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.  யாரும் எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை” என்று கூறினார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சந்திரமோகன்

அதேபோல் காங்கிரஸ் மூத்த தலைவர் சந்திரமோகன் அளித்த பேட்டியில் கூறியதாவது :  “தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும்.  நீண்ட நாட்கள் இடைவெளி விட்டு நடத்தினால் மக்களுக்கு சந்தேகம் எழும்.  எனவே அதை தவிர்க்க வேண்டும்.  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில்,  வாக்குப்பதிவில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். வாக்களிக்க வரக்கூடிய மக்களுக்கு போதுமான வசதிகள் வாக்குச்சாவடி மையத்தில் இருக்க வேண்டும். அடையாள அட்டை இருந்தால் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்”. இவ்வாறு சந்திரமோகன் தெரிவித்தார்.

Tags :
AAPADMKChennaiCongresscpicpimDMKElection2024Elections2024LokSabhaElection2024ParliamentElectionPoliticsRajivKumar
Advertisement
Next Article