பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் - முப்படை தளபதிகள் பங்கேற்பு!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் கடந்த 4 நாட்களாக இந்திய எல்லைகளை தாக்கி வருகிறது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுப்பதோடு எல்லை பகுதிகளில் பாதுகாப்பையும், கண்காணிப்பையும் தீவிரபடுத்தியுள்ளது. இதனிடையே, இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
இந்த நிலையில், போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில் நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து முப்படை தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். பிரதமர் இல்லத்தில் நடைபெற்றும் இந்த கூட்டத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதி சி.டி.எஸ் ஜெனரல் அனில் சவுகான், ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதி மற்றும் விமானப்படைத் தளபதி ஏபி சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் காலத்து கொண்டுள்ளனர்.
இரு நாடுகளிடையே நேற்று மாலை போர் முடிவுக்கு வந்த பிறகும் இரவு பல மணி நேரம் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது குறித்து ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
தொடர்ந்து பாகிஸ்தான் விவகாரத்தில் முப்படைகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 48 மணி நேரத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் 3-வது ஆலோசனைக் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.