"தேர்தலுக்காகவே எய்ம்ஸ் கட்டுமானப் பணி துவக்கம்" - மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் விமர்சனம்!
மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப்பணிகள் துவக்கப்பட்டுள்ளதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு 2018 டிசம்பரில் ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை சுற்று சுவர்கள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டு இருந்த நிலையில் எந்த ஒரு பணிகளும் மேற்கொள்ளபடாமல் இருந்தது.
இந்த நிலையில் L&T நிறுவனம் வாஸ்து பூஜையுடன் கட்டுமான பணிகளை இன்று துவக்கி உள்ளது. 10 தளங்கள், 870 படுக்கை வசதிகள், 38 படுக்கைகளுடன் கூடிய
ஆயுர்வேத சிகிச்சை மையம், மாணவர்கள், செவிலியர்களுக்கென வகுப்பாறை கட்டிடம்,
ஆய்வகக்கூடங்களுடன் ரூ.1977.80 கோடி மதிப்பீட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. 33 மாதங்களில் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை முடிக்க L&T நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியதாவது:
"மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் கட்டுமான பணிகள் ரகசிய திட்டத்தைப் போல் துவங்கப்பட்டுள்ளது. மதுரைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் கட்டுமான பணிகளை தொடங்கி வைத்திருக்கலாம். அடிக்கல் நாட்டப்பட்டு 5 ஆண்டுகளுக்கு பின்னர் கட்டுமான பணிகள் தொடங்கிய புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் நாடாளுமன்றத் தேர்தலுக்காக தொடங்கப்பட்டுள்ளது. பொறியியல் துறையை கொண்டு ரகசியமாக கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் கட்டுமான பணிகள் எப்போது தொடங்கப்படும் என நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினோம். கட்டுமான பணிகள் தொடக்க தேதி மற்றும் வேலை திட்டத்தை வெளியிட வேண்டுமென கோரிக்கை விடுத்தோம். ஆனால் கடைசி வரைக்கும் எங்களுடைய கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை.
இதன் கட்டுமானப் பணிகள் வெளிப்படை தன்மையற்ற பணிகளாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் 20-க்கும் மேற்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டுவதற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மட்டும் கடன் வாங்கி கட்டப்பட உள்ளது. கடன் வாங்கி கட்டுவதற்கான காரணத்தை மத்திய அரசு கூறவில்லை.
மத்திய அரசு கொடுக்க வேண்டிய ரூ.350 கோடி நிதியை வைத்து எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை முன்னரே தொடங்கி இருக்கலாம். மத்திய அரசு தமிழ்நாட்டிற்கான வளர்ச்சிப் பணிகளை தொடர்ந்து தாமதப்படுத்தி வருகிறது. ஒரே அமைச்சரவை கூட்டத்தில் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு, மதுரையை தவிர மற்ற 5 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுள்ளது."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.