“தொகுதி மறுவரையறை 1977 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மேற்கொள்ளப்பட வேண்டும்” - கனிமொழி எம்பி வலியுறுத்தல்!
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பை அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைப்பதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி அறிவிக்க வேண்டும், இதுதொடர்பாக எழுத்துபூர்வமாக ஒரு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தை நான்காவது முறை எம்பியாக இருப்பவரும், இன்றைய கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தை நடத்தியவருமான கனிமொழி, வரலாற்று சிறப்பு மிக்க கூட்டம் என்று குறிப்பிட்டுள்ளார். கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் முடிந்ததும் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி பத்திரிகையாளர்களிடம் கனிமொழி எம்பி விளக்கினார்.
பத்திரிக்கையாளர்களிடம் பேசிய கனிமொழி,
“அரசியல் அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்த இன்றைய நாளில் பல்வேறு மாநில முதலமைச்சர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஒரே அணியில் முதலமைச்சர் தலைமையில் அனைவரும் இணைந்துள்ளனர்.
நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக தெளிவான முடிவுகள் மத்திய அரசிடம் இல்லை. மாநில அரசு மற்றும் அரசியல் கட்சிகளிடம் தொகுதி மறு வரையறை தொடர்பான கருத்துக்களை கேட்க வேண்டும். தொகுதி மறுவரையறை 1977ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மேற்கொள்ள வேண்டும்.
அடுத்த 25 ஆண்டுகளுக்கு இதன் அடிப்படையிலேயே தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட வேண்டும். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்களும், ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி வருவதாக இருந்தது. ஆனால் அவர்கள் வர இயலவில்லை என்றாலும், அவர்களுடைய கருத்துக்களை தெளிவாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
முதலமைச்சரின் கருத்துகளை ஏற்றுக்கொண்டு தொகுதி மறுவரையறை தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று எனவும், தாங்களும் உடன்படுவதாக தெரிவித்திருக்கிறார்கள். எந்தெந்த மாநிலங்கள் பாதிக்கப்படுகிறதோ, யாருக்கு வலிக்கிறதோ அவர்கள் தானே கேட்க முடியும். பவன் கல்யாண் விரைவில் முதலமைச்சரை சந்தித்து பேச உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜகவினர் தமிழ்நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும் எதிரானவர்கள் என்று முதலமைச்சர் கூறியதை போலவே அவர்களின் நடவடிக்கைகள் உள்ளது. கூட்டு நடவடிக்கை குழுவில் முன்மொழியப்பட்ட தீர்மானங்களை பிரதமர் மோடியிடம் கொடுக்க உள்ளோம்” என தெரிவித்தார்.