ராமர் கோயில் பிரதிஷ்டை - டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அரைநாள் விடுமுறை.!
ராமர் கோயில் பிரதிஷ்டையை முன்னிட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட் முதல் பூமி பூஜை செய்யப்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடையவுள்ள நிலையில், கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை நாளை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
இதற்காக உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அயோத்தி விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்கவுள்ளனர். சிலை பிரதிஷ்டைக்கு முந்தைய சிறப்பு சடங்குகள் செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கின. 121 ஆச்சார்யார்கள் இச்சடங்குகளை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் பல மாநிலங்களில் ராமர் கோயில் பிரதிஷ்டையை முன்னிட்டு விடுமுறை அளித்துள்ளதாக அறிவிப்புகள் வெளியாகிய நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையும் விடுமுறை அறிவித்துள்ளது. அதன் படி ஜனவரி 22ம் தேதி பிற்பகல் 2:30 மணி வரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.