ஆலங்குடியில் அறம்வளர்த்த நாயகி சமேத பேரூராண்டார் திருக்கோயிலில் முதலாம் ஆண்டு வருடாபிஷேக விழா! - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!
ஆலங்குடியில் அறம்வளர்த்த நாயகி சமேத பேரூராண்டார் திருக்கோயிலில் முதலாம் ஆண்டு வருடாபிஷேக விழாவை முன்னிட்டு ரதத்தேர் திருவீதி உலா மற்றும் சுவாமி அம்பாள் திருக்கல்யான வைபவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் 700 அண்டுகள் பழமை வாய்ந்த அறம்வளர்த்த நாயகி சமேத பேரூராண்டார் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலில், முதலாம் ஆண்டு வருடாபிஷேக விழாவை முன்னிட்டு காலை முதலே சிறப்பு பூஜைகள், சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. இதனையடுத்து, அம்பாளும் உற்சகமூர்த்தியும் எழுந்தருளிய தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். மேலும், இந்த தேர் பவனியில் வண்ண வான வேடிக்கைகள் காண்போரை வெகுவாக கவர்ந்தது.
இதையும் படியுங்கள் : “இனிப்பு வழங்கிய சகோதரர் ராகுல் காந்திக்கு இனிப்பான வெற்றியை கொடுப்போம்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
தேர் கோயிலை சுற்றி உள்ள நான்கு வீதிகளிலும் வளம் வந்து நிலை நின்றது. இந்த தேர் பவனி நிகழ்ச்சியில் தெரு நெடுகிலும் நின்ற ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதனையடுத்து, ஈசன் பேரூராண்டார், அம்பாள் அறம்வளர்த்த நாயகி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
முன்னதாக, பெண் வீட்டு சீர்வரிசைகள் ஆலங்குடி நாடியம்மன் கோயிலில் இருந்து
ஊர்வலமாக பேரூராண்டார் திருக்கோயிலை வந்தடைய, ராஜகோபுரத்தின் முன்னதாக மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது. இதனையடுத்து, சீர்வரிசைப் பொருட்களுக்கு பூஜை நடைபெற்று.
அதன் பின்னர் கோயில் வளாகத்தில் ஈசனுக்கும், அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடந்தேறியது. இந்த திருக்கல்யாண வைபத்தில் ஆயிரம்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண வைபவத்தை தரிசித்து வழிபாட்டில் ஈடுபட்டனர்.