உ.பி. இடைத்தேர்தலில் இருந்து விலகிய காங்கிரஸ் | பொறுப்பாளர் #AvinashPande அறிவிப்பு!
உத்தரப் பிரதேச இடைத்தேர்தலில் இருந்து காங்கிரஸ் விலகுவதாக அம்மாநில காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே அறிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் காலியாகவுள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 9 தொகுதிகளுக்கு வருகின்ற நவ.13-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. முடிவுகள் நவ.23ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன. மில்கிபூர் சட்டப்பேரவை தேர்தலுக்கு தொடர்புடைய வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அந்த தொகுதிக்கு மட்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.
இதையும் படியுங்கள் : “விளையாட்டில் சாதிக்க நினைப்பவர்களுக்கு வறுமை ஒரு தடையாக இருக்கக்கூடாது!” – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
இந்த இடைத்தேர்தல் போட்டியில் இருந்து காங்கிரஸ் விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி கட்சியாக காங்கிரஸுக்கு இரண்டு இடங்களுக்கு மேல் கொடுக்க அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி தயாராக இல்லை என தகவல் வெளியாகி உள்ளது. காசியாபாத் சதர் மற்றும் கைர் சட்டமன்ற தொகுதிகளை மட்டும் காங்கிரசுக்கு வழங்க முடிவெடுத்துள்ளது.
இந்நிலையில், அம்மாநில காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது :
"உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தொகுதிகள் இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை. காங்கிரஸ் கட்சியினர் வேறு எந்த கட்சியின் சின்னத்திலும் போட்டியிடவும் மாட்டார்கள். இந்தியா கூட்டணியின் வேட்பாளர்களுக்காக காங்கிரஸ் கட்சி தீவிர பிரசாரம் மேற்கொள்ளும். இந்தியா கூட்டணி வேட்பாளர்களை எந்தவித நிபந்தனையின்றி ஆதரிக்கிறோம்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.