பெண்களுக்கு மாதம் ரூ.2500, ரூ.500-க்கு சமையல் எரிவாயு, 200 யூனிட் இலவச மின்சாரம் - தெலங்கானா தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் அறிவிப்பு!!
தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டார்.
119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானா சட்டப்பேரவைக்கு வரும் நவம்.30ல் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் தெலங்கானா மாநிலத்திற்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் இணைந்து வெள்ளிக்கிழமை வெளியிட்டனர். அத்துடன் ‘அபய ஹஸ்தம்’ எனும் பெயரில் ஆறு உறுதிமொழிகளை அளித்துள்ளனர்.
மஹாலட்சுமி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 நிதியுதவி வழங்கப்படும். ரூ.500க்கு சமையல் எரிவாயு வழங்கப்படும். அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கிரஹ ஜோதி திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும், ரூ.10 லட்சத்திற்கான மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்துள்ளது. தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “தெலங்கானா மாநிலத்திற்கு சமூகநீதி, பொருளாதார முன்னேற்றம் மற்றும் சீரான வளர்ச்சியை வழங்க காங்கிரஸ் கட்சி உறுதி பூண்டுள்ளது.
கர்நாடகா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் ஆட்சிக்கு வந்த உடனே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதைப் போல, இந்த வாக்குறுதிகள் அனைத்தும் உடனே நிறைவேற்றப்படும்.” என்று கூறினார். தெலங்கானா சட்டப்பேரவைக்கு நவம்.30-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதற்கான வாக்கு எண்ணிக்கை டிசம்.3-ஆம் தேதி நடத்தப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.