காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கு முடக்கம் தற்காலிகமாக ரத்து!
காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கத்தை தற்காலிகமாக ரத்து செய்து வருமான வரித்துறை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி தொடர்புடைய அனைத்து வங்கி கணக்குகளும் வருமான வரித்துறையினரால் முடக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி இன்று காலை அறிவித்தது. இந்த குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அஜய் மக்கான் தெரிவித்திருந்தார்.
இதையும் படியுங்கள் : “4 மாதங்களில் 4.5 லட்சம் பேருக்கு புற்றுநோய் பரிசோதனை” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
நாடாளுமன்ற தேர்தல் குறித்த அறிவிப்புகள் இன்னும் சில நாட்கள் வர உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுத் தேர்தல் சமயத்தில் வேண்டுமென்றே தங்களது கட்சி வங்கி கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாகவும் இதன் மூலமாக ஜனநாயகமும் முடக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இதேபோல பொதுமக்களிடமிருந்து நிதி உதவி பெறுவதற்காக காங்கிரஸ் கட்சியால் சமீபத்தில் உருவாக்கப்பட்ட வங்கி கணக்குகளையும் வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளதாகவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, முடக்கபட்ட காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் தற்காலிகமாக செயல்பட வருமான வரித்துறை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளது. வருமானவரி தீர்ப்பாயத்தில் காங்கிரஸ் கட்சி முறையிட்ட நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.