வயநாட்டில் யானை தாக்கி பலியானோரின் குடும்பத்தினரை ராகுல் காந்தி நேரில் ஆறுதல்!
வயநாட்டில் காட்டு யானை தாக்கி பலியான வனத்துறை கண்காணிப்பாளர் குடும்பத்தினரை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
மானந்தவாடி அருகே குடியிருப்பு பகுதிக்குள் 16 ஆம் தேதி புகுந்த யானை வனத்துறை கண்காணிப்பாளர் வி.பி.பாலை தாக்கியது. இந்த சம்பவத்தில் அவர் பலியானார். கடந்த இரண்டு வாரங்களில் யானை தாக்கி 3 பேர் பலியான நிகழ்வு அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள் : ‘டெல்லி சலோ’ விவசாயிகள் போராட்டம்: மத்திய அமைச்சர்களுடன் 4ம் கட்ட பேச்சுவார்த்தை!
இதையடுத்து, இந்த பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி வயநாடு மாவட்டம் புல்பள்ளி அருகே உள்ள பாக்கத்தில் பிப். 17 ஆம் தேதி பெரும் போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், ராகுல் காந்தி உத்திரப் பிரதேசத்தில் தனது நடைப்பயணத்தை நிறுத்திவிட்டு வயநாட்டிற்கு விரைந்தார். அங்கு யானை தாக்கி பலியான வனத்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும், இந்த சம்பவம் குறித்து உறுதியான நடவடிக்கை எடுக்கக் கோரி கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். இதற்கிடையில், வயநாட்டில் வனவிலங்குகள் தாக்குதல் தொடர்பான பிரச்னைகள் குறித்து விவாதிக்க உயர்நிலைக் கூட்டத்தை நடத்துமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டார்.