#MaharashtraElections | 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்!
மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலைக் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் மாதம் 20-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து, நவம்பர் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. மகாராஷ்டிரத்தில் மகா விகாஸ் அகாடி கூட்டணி தொகுதிப் பங்கீடு ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, காங்கிரஸ், சிவசேனை (யுபிடி), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) ஆகிய 3 கட்சிகளும் தலா 85 இடங்களில் போட்டியிடும் என்றும் மீதமுள்ள 23 இடங்களில் அந்தந்த கட்சி வேட்பாளர்கள் பட்டியலின் அடிப்படையில் ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள் : நவ. 25 முதல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்? | ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு!
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலுக்காக கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. கடந்த அக். 24ம் தேதி, 48 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலைக் காங்கிரஸ் வெளியிட்டது. இந்த நிலையில் கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி கூடித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் குறித்து ஆலோசித்ததையடுத்து 23 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாம் கட்ட பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலுடன் மொத்தம் இதுவரை 71 வேட்பாளர்களைக் காங்கிரஸ் அறிவித்துள்ளது.