வக்ஃபு சட்டத் திருத்தத்திற்கு எதிராக காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் மனு!
வக்ஃபு வாரிய சொத்துகளை நிர்வகிப்பது தொடர்பான சட்டத் திருத்த மசோதா இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் பெரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வக்ஃபு சட்டத் திருத்தத்திற்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. முகமது ஜாவேத் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில்,
“வக்ஃபு திருத்தச் சட்டம் இஸ்லாமிய சமூகத்தினருக்கு எதிராக பாகுபாட்டுடன் உள்ளது. அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார். இந்தச் சட்டம் அரசியலமைப்பின் பிரிவுகள் 14 (சமத்துவம்), 25 (மதத்தைப் பின்பற்றும் சுதந்திரம்), 26 (மத விவகாரங்களை நிர்வகிக்கும் சுதந்திரம்), 29 (சிறுபான்மை உரிமைகள்) மற்றும் 300A (சொத்துரிமை) ஆகியவற்றை மீறுவதாக உள்ளதாகவும் மனுவில் கூறியுள்ளார்.
முன்னதாக வக்ஃபு மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடப் போவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் அறிவித்திருந்தார்.