For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“அரசியலில் விஜய் வெற்றி பெற வாழ்த்துகள்” - #VCK தலைவர் திருமாவளவன்!

01:49 PM Aug 27, 2024 IST | Web Editor
“அரசியலில் விஜய் வெற்றி பெற வாழ்த்துகள்”    vck தலைவர் திருமாவளவன்
Advertisement

அரசியலில் விஜய் வெற்றிப் பெற வாழ்த்துகள் என விசிக தலைவர் திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார். 

Advertisement

திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

மது மற்றும் போதைப் பொருள்கள் ஒழிப்பு மகளிர் மாநாடு ஒன்றை நடத்த இருக்கிறோம். இந்தியா முழுவதும் மதுவிலக்கை ஒரு தேசியக் கொள்கையாக அறிவிக்க வேண்டும்.
போதைப் பொருள்கள் வெகுவாக புழக்கத்தில் உள்ளன. அவற்றை கட்டுப்படுத்த வேண்டும். அரசமைப்புச் சட்டம் 47 அதற்கான வழிவகைகளை கூறுகிறது. எனவே, இதனை ஒரு மாநில அளவிலான பிரச்னையாக கருதாமல், தேசிய பிரச்னையாக கருத்தில் கொண்டு இந்தியா முழுவதும் தேசிய மதுவிலக்கு கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிற மாநாடாக இந்த மாநாடு அமையும்.

கள்ளக்குறிச்சி அருகே இந்த மாநாட்டை நடத்த இருக்கிறோம். இந்த மாநாட்டையொட்டி தமிழ்நாடு முழுவதும் நான் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். கட்சி சார்பற்ற ஜனநாயக சக்திகள், மதுவை ஒழிப்பதற்கும், போதை பொருள்களை ஒழிப்பதற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிற அமைப்புகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து தொடர் பரப்புரையில் ஈடுபட இருக்கிறோம். இந்த மாநாட்டுக்கு அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் ஆதரவு நல்கிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

அமெரிக்க பயணம் மேற்கொள்ள இருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பயணம் வெற்றிகரமாக அமைய வேண்டும். அவருடைய பயணத்தின் நோக்கம் வெற்றிகரமாக அமைய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

வெளிநாடு செல்லும் முதலமைச்சர் நிர்வாகத்தை கவனிப்பதற்காக, துரைமுருகன் போன்ற மூத்த தலைவர்களை நியமிக்கலாம் என்ற கருத்து எழுந்துள்ளது என்ற கேள்விக்கு,  “15 நாள் பயணம் மேற்கொள்கிறார். இந்த 15நாட்களில் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் நிர்வாகத்தை கவனித்துக் கொள்கிற அளவுக்கான தொலைத்தொடர்பு வசதிகள் பெருகி உள்ள காலம் இது. எனவே இது சம்பந்தமில்லாத ஒரு கோரிக்கையாக இருக்கிறது. திமுகவை சீண்டிப்பார்க்கும் ஒரு கோரிக்கையாக இருக்கிறது அவ்வளவுதான்.  இதில் கருத்துச் சொல்வதற்கு எதுவும் இல்லை.

அரசியலமைப்புச் சட்டம்  படிப்படியாக, ஒட்டுமொத்தமாக மது மற்றும் போதைப் பொருள்களை ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. அது தொடர்பாக ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சி காலத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு மதுவிலக்கு ஆலோசனை குழு அமைக்கப்பட்டு, அந்த குழு பல்வேறு பரிந்துரைகளையும் வழங்கியது. மாநில அரசுகள் அதற்கு முழுமையான ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று பரிந்துரையில் கூறப்பட்டது.

அன்றைய மாநில அரசுகள் அதற்கு அப்போது ஒத்துழைப்பு நல்கவில்லை என்பதனால், அந்த பரிந்துரைகள் நடைமுறைக்கு வரவில்லை. அப்படியே கிடக்கில் போடப்பட்டிருக்கிறது. எனவே அரசியலமைப்புச் சட்டம் சொல்லுவதை நடைமுறைப்படுத்த வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தின் 47வது உறுப்பு சொல்லுவது முழு மதுவிலக்கு என்பது தான். அதற்கு மாற்று என்ற எதுவும் இல்லை. பீகார், குஜராத் போன்ற ஒரு சில மாநிலங்களைத் தவிர ஒவ்வொரு மாநிலத்திலும் அரசே மதுபானத்தை விற்பனை செய்கிற நிலை இருக்கிறது.

மதுவிலக்கு பிரிவு என்று ஒன்று காவல்துறையில் இருக்கிறது. ஆனால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தாமல் மது வியாபாரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தான் அந்த பிரிவு பயன்படுத்தப்படுகிறது. ஐஏஎஸ் போன்ற அதிகாரிகளை அவர்களின் சிறந்த ஆளுமைகளை ஆட்சி நிர்வாகத்தின் மேம்பாட்டுக்கு பயன்படுத்தாமல், இதுபோல மதுவை வியாபாரம் செய்வது எப்படி? லாபத்தை பெருக்குவது எப்படி? கடைகளில் எண்ணிக்கையை பெருக்குவது எப்படி? என்பதற்கு அந்த அதிகாரிகளின் சிந்தனை ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது. இது வேதனைக்குரியது.

போதைப்பொருள்களால் ஏற்படுகிற பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்பதற்கு மையம் அல்லது டி அடிக்சன் சென்டர் போன்ற எதுவும் எந்த மாநிலத்திலும் இல்லை. அதற்கு நிதி ஒதுக்கீடு செய்வது இல்லை. பல ஆயிரம் கோடிகளை லாபமாக ஈட்டுவதற்கு அரசு திட்டமிடுகிறது. அதனால் பாதிக்கப்படுகிற மக்களை பாதுகாப்பதற்கும். குடும்பங்களை பாதுகாப்பதற்கும் உரிய நிதி ஒதுக்கீடு செய்வதில்லை என்பது வேதனைக்குரியது.எனவே மதுவிலக்கு கொள்கை என்றால் அது 100 விழுக்காடு நடைமுறையில் இருக்க வேண்டும். அப்போதுதான் கள்ளச்சாராயத்தையும் கட்டுப்படுத்த முடியும். நல்ல சாராயம் என்கிற பெயரில் அரசும் அதை விற்பனை செய்கிற போது, கள்ளச்சாராயத்தை பற்றிய கவலையும் அரசுக்கும், ஆட்சி நிர்வாகத்திற்கும் இல்லாமல் போய் விடுகிறது. எனவேதான் 100% மதுவிலக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.

விஜய் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு,

சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து, ஆட்சியை கைப்பற்றி விட முடியும் என்கிற ஒரு எண்ணம் நீண்ட காலமாக தமிழக அரசியலில் இருந்து வருகிற ஒன்றுதான். அந்த முயற்சியில் ஆந்திராவிலும் கூட என்டிஆர்-ஐ பின்பற்றி பலர் வந்து பார்த்தார்கள். எம்ஜிஆர் சினிமாவில் இருந்த காலத்திலேயே அரசியலில் தீவிரமாக ஈடுபாடு கொண்டிருந்தார். அதனால் அவர் அரசியலில் இருந்து அதாவது ஒரு ஒழுங்கு நடவடிக்கை என்கிற பெயரால் திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட போது, நீண்ட நெடிய அனுபவம் உள்ள பல தலைவர்கள் அவரோடு வெளியேறினார்கள்.

அவருடைய வெற்றிக்கு அது ஒரு காரணம். வெறும் சினிமா ரசிகர்களை, ரசிகர் மன்ற தலைவர்களை மட்டுமே வைத்துக் கொண்டு அரசியல் செய்யவில்லை. அவர் கட்சியை தொடங்குகிற போது திமுகவிலிருந்து அவரோடு சேர்ந்து விலகிய பல அரசியல் தலைவர்கள் அவரோடு இருந்தார்கள். அதனால் வெற்றி பெற முடிந்தது.

அதன் பிறகு வந்த தலைவர்கள், அதாவது சினிமா மூலம் வந்த தலைவர்கள் அரசியலில் பிரகாசிக்க முடியாமல் போனதற்கு அது ஒரு காரணம். தற்போது மக்களிடையே சமூக ஊடகங்களின் வாயிலாக வளர்ந்துள்ள அரசியல் விழிப்புணர்வு இன்னொரு காரணம். விஜய்க்கு என்னுடைய வாழ்த்துகள். அரசியல் எவ்வளவு கடினமானது, போராட்டங்கள் நிறைந்த ஒரு களம் என்பதை இனி நடைமுறையில் அவர் சந்திக்க நிறைய வாய்ப்புகள் உருவாகும். தாக்குப் பிடித்து நிற்க வேண்டும். மக்களுடைய நன்மதிப்பை பெற வேண்டும். இது எல்லாம் நிகழ்ந்த பிறகு தான் இதுகுறித்து நாம் ஒரு கருத்தை சொல்லமுடியும்.

முன்கூட்டியே நாம் ஒரு யூகத்தில் கணக்கு போட்டு சொல்ல முடியாது. அரசியலில் விஜய் வெற்றி பெறுவதற்கு என்னுடைய வாழ்த்துகள்.

பழனியில் நடைபெற்றுள்ள முருகன் மாநாடு குறித்த கேள்விக்கு,

இந்து சமய அறநிலையத்துறையின் சார்பிலே அது நடத்தியிருக்கிறார்கள். இந்து சமய அறநிலைத்துறை பல வேலைகளை மதம் சார்ந்த பணிகளை செய்து கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக அப்படி பார்த்தால் இந்து சமய அறநிலைத்துறை வேண்டாம் என்று நாம் சொல்ல நேரிடும். இந்து சமய அறநிலையத்துறை ஒரு ஆலோசனை கூட்டத்தைக் கூட்டி, அந்த ஆலோசனை கூட்டத்தில் எடுத்த முடிவு அடிப்படையில் இந்த மாநாட்டை நடத்தி இருப்பதாக தெரிய வருகிறது. இந்த மாநாடு பல லட்சக்கணக்கான மக்களின் ஆதரவோடு வெற்றி பெற்று இருப்பதாகவும் தெரிகிறது.

பாரதிய ஜனதா, ஆர்எஸ்எஸ் போன்ற இயக்கங்கள் கடவுள், மதம் ஆகியவற்றை பயன்படுத்தி மக்களை அரசியல், அடிப்படை வாக்கு வங்கியாக மாற்றுவதற்கு வட இந்திய மாநிலங்களில் எவ்வாறு முயற்சித்தார்களோ அதுபோல தமிழ்நாட்டிலும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அப்படிப்பட்ட அந்த முயற்சிகளுக்கு இடம் அளிக்காமல் அவர்களின் அரசியல் சதியை அம்பலப்படுத்தக்கூடிய வகையிலே இந்து சமய அறநிலைத்துறை செயல்படுகிறது என்றால் அதை நாங்கள் வரவேற்க கடமைப்பட்டிருக்கிறோம். மற்றபடி அந்த மாநாடு சிறப்பாகவே நடந்தேறி இருக்கிறது. அதில் விமர்சிப்பதற்கு வேறு ஒன்றும் இல்லை.

ஆனால், அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய கல்லூரிகளில் பக்தி இலக்கியங்கள் தொடர்பான போட்டிகள் நடத்தப்படும், என்று சொல்லி இருப்பது பரவலாக ஒரு விவாதத்தை எழுப்பி இருக்கிறது. அது மதம் சார்ந்த நடவடிக்கையாக அமைந்து விடாமல் அரசு கவனித்துக் கொள்ளும் என்று நான் நம்புகிறேன். பாஜகவுடன் திமுக இணைகிறது என்ற கேள்விக்கு, யூகமான கேள்விகள்” என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement