"உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள்" - அன்புமணி ராமதாஸ்!
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "நவி மும்பையில் இன்று நடைபெற்ற மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றிருக்கிறது. இதன் மூலம் முதல் முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்த இந்திய அணியின் வீராங்கனைகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இறுதிப் போட்டியில் ஷபாலி வர்மா 87 ரன்கள் சேர்த்ததும், தீப்தி சர்மா 58 ரன்கள் சேர்த்ததுடன், 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியதும் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றன. அந்த வீராங்கனைகளுக்கு சிறப்பு வாழ்த்துகள். இந்த வெற்றி மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்கு எண்ணற்ற புதிய கதவுகளைத் திறக்கும்.
லீக் சுற்றுப் போட்டிகளின் போது 3 ஆட்டங்களில் தோல்வி அடைந்ததால் அரை இறுதிக்கு தகுதி பெற முடியுமா? என்ற மோசமான நிலையில் இருந்த இந்திய அணி, அதன்பின் அரை இறுதியில் ஆஸ்திரேலியாவையும், இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவையும் வீழ்த்தி உலகக் கோப்பையை கைப்பறியிருப்பது விடா முயற்சிக்கான சான்று. சாதனை படைத்த அனைத்து வீராங்கனைகளுக்கும் எனது வாழ்த்துகள்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.