“மகளிர் உரிமைத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகள்” - சுப்ரியா சுலே பதிவு!
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்த 'எல்லோருக்கும் எல்லாம்' என்ற ஆவணப்படத் தொடரின் இரண்டாம் பாகத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி என தேசியவாத காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார்.
நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1 வரை நடக்க உள்ளது. பின்னர், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடக்க உள்ளது. தமிழ்நாட்டில் ஏப்.19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் நாடு முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.
இதையும் படியுங்கள் : “ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும், அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது” - இபிஎஸ் பேச்சு
தமிழ்நாடு அரசின் சாதனைகளையும், தமிழ்நாடு அரசின் 2024–2025–ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சம்களையும் இல்லந்தோறும் கொண்டு சேர்க்கவும், ஒவ்வொருவருக்கும் எடுத்துரைக்கும் வகையில் ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ பரப்புரைக் கூட்டங்கள், ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ திண்ணைப் பிரச்சாரம் ‘எல்லோருக்கும் எல்லாம்’ பொதுக்கூட்டங்கள் உள்ளிட்டவை திமுக சார்பில் முன்னதாக நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, 'எல்லோருக்கும் எல்லாம்' என்ற ஆவணப்படத் தொடர் தயாரிக்கப்பட்டு ஒவ்வொரு பாகமாக வெளியிடப்பட்டு வருகிறது. அதன் முதல் பாகத்தை திமுக எம்.பி. கனிமொழி மார்ச் 4 ஆம் தேதி வெளியிட்டார். அதில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிலையில், 'எல்லோருக்கும் எல்லாம்' என்ற ஆவணப்படத் தொடரின் இரண்டாம் பாகத்தை தேசியவாத காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் சுப்ரியா சுலே எம்.பி. இன்று (ஏப்ரல். 14) வெளியிட்டார். இந்த ஆவணப்படத் தொடரின் இரண்டாம் பாகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்திய ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ பற்றி விளக்கப்பட்டுள்ளது.
இந்த பாகத்தை வெளியிட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் சுப்ரியா சுலே தனது X தள பக்கத்தில், “சமூகத்தில் பெண்கள் சுயமரியாதையோடு வாழ உறுதுணையாக இருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், திராவிட மாடல் அரசுக்கும் பாராட்டுகள். இத்திட்டம் குறித்த ‘எல்லோருக்கும் எல்லாம்’ ஆவணப்படத் தொடரின் பாகத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி” என்று பதிவிட்டுள்ளார்.