கம்போடியாவுடனான மோதல் போராக மாறக்கூடும்; தாய்லாந்து எச்சரிக்கை!
தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையே எல்லையில் ஏற்பட்டுள்ள மோதல்கள் தீவிரமடைந்து, இதுவரை குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இரு நாடுகளிலும் இடம்பெயர்ந்துள்ளனர். இந்த மோதல்கள் 'போராக மாறக்கூடும்' என தாய்லாந்தின் தலைவர் எச்சரித்துள்ளார்.
தாய்லாந்தின் பிரதமர் பும்தாம் வெட்சயச்சாய், தற்போது இந்த சண்டையில் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதாகவும், எல்லைப் பகுதியில் 12 இடங்களுக்குப் பரவியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மறுபுறம், கம்போடியா, தாய்லாந்து குண்டுக்கூட்டுகளைப் (cluster munitions) பயன்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளது. குண்டுக்கூட்டுகள் உலகின் பல பகுதிகளில் தடை செய்யப்பட்டுள்ளன, ஏனெனில் அவை பொதுமக்கள் மீது பாகுபாடற்ற விளைவுகளை ஏற்படுத்தும். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு தாய்லாந்து இதுவரை பதிலளிக்கவில்லை.
உலகத் தலைவர்கள் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு வேண்டுகோள் விடுத்த போதிலும், தாய்லாந்தின் வெளியுறவு அமைச்சர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம், இந்த மோதலில் மூன்றாம் தரப்பு 'தேவையில்லை' என்று தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (ஆசியான்) தலைவரான மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம், இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகளை எளிதாக்க முன்வந்திருந்தார்.
மேலும் தாய்லாந்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நிகோரண்டெஜ் பாலங்குரா, நிலைமை இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்றும், புனோம் பென் தனது தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து தாய்லாந்து மற்றும் கம்போடியா இரண்டும் வியாழக்கிழமை முதலில் சுட்டது யார் என்று பரஸ்பரம் குற்றம் சாட்டியுள்ளன. எல்லைக்கு அருகில் தாய்லாந்து துருப்புகளைக் கண்காணிக்க கம்போடியா ராணுவம் ட்ரோன்களைப் பயன்படுத்தியதால் மோதல் தொடங்கியதாக தாய்லாந்து கூறுகிறது.
எல்லையில் உள்ள கெமர்-இந்து கோவிலை நோக்கி தாய்லாந்து வீரர்கள் ஒரு முந்தைய ஒப்பந்தத்தை மீறி முன்னேறியபோது மோதலைத் தொடங்கினர் என்று கம்போடியா கூறுகிறது. கம்போடிய வீரன் ஒருவர் மே மாதம் நடந்த மோதலில் கொல்லப்பட்ட பின்னர் சமீபத்திய பதட்டங்கள் அதிகரித்தாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து தாய்லாந்தின் சுரின் மாகாணத்தில் உள்ள ஒரு விளையாட்டு வளாகம் வெளியேற்றப்பட்டவர்களுக்கான மையமாக மாற்றப்பட்டுள்ளது. அங்கு தங்கியுள்ளவர்களில் பலர் குழந்தைகள் மற்றும் முதியவர்கள்.
வியாழக்கிழமை நடந்த ராக்கெட் மற்றும் பீரங்கி தாக்குதல்களைக் கண்டு தாங்கள் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என்று தெரிவித்துள்ளனர்.