தவெக - விசிக இடையே மோதலா? #Thirumavalavan விளக்கம்!
தமிழக வெற்றிக் கழகத்திற்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இடையே எந்த மோதலும் இடையே எந்த மோதலும் இல்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, விசிக தலைவர் திருமாவளவன் இன்று (டிச.9) சந்தித்துப் பேசினார். அப்போது, ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிட அக்கட்சியின் சார்பில் ரூ. 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார். திருமாவளவனுடன் நாடாளுமன்ற உறுப்பினர் து. ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் சிந்தனைச்செல்வன், எம். பாபு, எஸ்.எஸ்.பாலாஜி, ஜெ. முகம்மது ஷா நவாஸ் ஆகியோர் உடன் இருந்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது,
"ஃபெஞ்சல் புயல் விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழலில், மத்திய அரசிடன் ரூ.2,475 கோடி நிவாரணம் கோரி தமிழ்நாடு அரசு மனு அளித்தது. ஆனால் மத்திய அரசு வழக்கம்போல் தமிழ்நாட்டு மக்களை கைவிட்டு விட்டது. வெறும் ரூ.944.80 கோடி மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சமீப காலமாக பல்வேறு நிகழ்வுகளில் தெரிவித்த கருத்துகளால் கட்சியின் நம்பகத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இது தொடர்பாக, பலமுறை அவருக்கு அறிவுரை வழங்கினோம். ஆனாலும் அவருடைய பேச்சு நம்பகத்தன்மைக்கு எதிராக அமைந்த சூழலினால், கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடி அவரை 6 மாத காலத்திற்கு கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளோம். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கலந்துக்கொள்ளும் நிகழ்ச்சியில் என்னால் கலந்து கொள்ள முடியாது எனக் கூறியது எனது சுதந்திரமான முடிவு. தமிழக வெற்றிக் கழகத்திற்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இடையே எந்த மோதலும் இடையே எந்த மோதலும் இல்லை.

நூல் வெளியீட்டு விழாவிற்கு முன்பாக ஆதவ் அர்ஜுனாவிடம் நூல் மற்றும் அம்பேத்கர் தொடர்பாக மட்டும் பேச வேண்டும் என தெரிவித்திருந்தேன். ஆனார் அவர் அதனை மீறி தேசிய அரசியல் தொடர்பாக பேசி உள்ளார். கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவரை இடைநீக்கம் செய்துள்ளோம். ஆதாவ் அர்ஜூனாவின் பேச்சு என்மீதான நம்பகத்தன்மைக்கு பாதிப்பு அளிக்கும் வகையில் உள்ளது.ஆதார் அர்ஜுனா குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஆலோசிக்கவில்லை"
இவ்வாறு விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.