அனுமதியின்றி பிரசாரம்... வேட்பாளர் சீதாலட்சுமி உட்பட நாதகவினர் 51 பேர் மீது வழக்குப்பதிவு!
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுதாக்கல் முடிவடைந்த நிலையில், வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக வேட்பாளர் வி.சி.சந்திரசேகருக்கு இந்தியா கூட்டணி கட்சிகள் வாக்கு சேகரித்து வருகின்றன.
அதேபோல் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கட்சி வேட்பாளர் மா.கி.சீதாலட்சுமிக்கு வாக்கு சேகரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி கட்சியினருடன் பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் உள்ள சிஎஸ்ஐ கிறிஸ்துவ தேவாலயம் முன்பாக பிரார்த்தனை நடத்திவிட்டு, வெளியே வரும் கிறிஸ்துவ மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அதே பகுதியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சீமானுக்கு எதிரான துண்டு பிரசுரங்களை வழங்கினர். இதனால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.
சீமானுக்கு எதிராக துண்டு பிரசுரங்கள் வழங்கி வந்த தந்தை பெரியார் திராவிடர்
கழகத்தினரை, நாம் தமிழர் கட்சியினர் சென்று தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கிருந்த காவல்துறையினர் இரண்டு தரப்பினரையும் அப்பகுதியை விட்டு வெளியே செல்லக் கூறினர். ஆனால் தொடர்ந்து மீண்டும் தேவாலயம் முன்பாக நாம் தமிழர் கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து கிறிஸ்தவ தேவாலயம் முன்பு அனுமதி இன்றி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக, நாதக வேட்பாளர் சீதாலட்சுமி உட்பட 51 பேர் மீது தேர்தல் பறக்கும் படையினர் கொடுத்த புகாரின் அடிப்படையில், 6 பிரிவுகளின் கீழ் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.