நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரசண்டா அரசு வெற்றி பெறுமா? நேபாள அரசியலில் பரபரப்பு!
நேபாளில் பிரதமர் பிரசண்டா இன்று நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார்.
நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்) தலைவர் பிரசண்டா தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றிருந்த கேபி சர்மா ஓலி தலைமையிலான சிபிஎன்-யுஎம்எல் கட்சி, கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கடந்த வாரம் திரும்பப் பெற்றது.
பிரசண்டாவுக்கும், சர்மா ஓலிக்கும் அண்மைக்காலமாக ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளையடுத்து, ஷேர் பகதூர் தேவுபா தலைமையிலான நேபாளி காங்கிரஸுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கவும் சிபிஎன்-யுஎம்எல் முடிவு செய்துள்ளது. இரு கட்சிகளுக்குமான ஒப்பந்தப்படி புதிய அரசு அமையும்பட்சத்தில் நாடாளுமன்றத்தின் மீதம் உள்ள மூன்றாண்டு பதவிக் காலத்தில் சர்மா ஓலி முதல் ஒன்றரை ஆண்டுக்கும், ஷேர் பகதூர் தேவுபா அடுத்த ஒன்றரை ஆண்டுக்கும் பிரதமராகப் பதவி வகிப்பார்கள்.
இந்த முடிவைத் தொடர்ந்து, புதிய கூட்டணி அரசு அமைவதற்கு ஏதுவாக பிரதமர் பதவியிலிருந்து பிரசண்டா விலக வேண்டும் என இரு கட்சிகளும் வலியுறுத்தின. ஆனால், பிரதமர் பதவியை ராஜிநாமா செய்வதற்குப் பதிலாக நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வது என பிரசண்டா தீர்மானித்தார்.
அதன்படி, பிரசண்டா அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி, தங்களது கட்சி எம்பிக்கள் அனைவரும் நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என நேபாளி காங்கிரஸ், சிபிஎன்- யுஎம்எல் கட்சிகள் வியாழக்கிழமை கொறடா உத்தரவு பிறப்பித்தன.
275 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் நேபாளி காங்கிரஸுக்கு 89 உறுப்பினர்களும், சிபிஎன்-யுஎம்எல் கட்சிக்கு 78 உறுப்பினர்களும் உள்ளனர். பிரசண்டாவின் சிபிஎன் (மாவோயிஸ்ட் மையம்) கட்சிக்கு 32 உறுப்பினர்கள் உள்ளனர்.
பிரசண்டா நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற 138 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால், நேபாளி காங்கிரஸ், சிபிஎன்- யுஎம்எல் கூட்டணிக்கு 167 உறுப்பினர்கள் உள்ளதால், நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரசண்டா தோல்வியடைவார் எனக் கூறப்படுகிறது.
அவ்வாறு நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரசண்டா தோல்வியுற்றால், சர்மா ஓலி தலைமையிலான புதிய கூட்டணி அரசு ஓரிரு நாள்களில் அமைக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நேபாளத்தில் கடந்த 16 ஆண்டுகளில் 13 அரசுகள் ஆட்சிபுரிந்துள்ளன.