தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு இரங்கல் தீர்மானம்!
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2வது நாள் அமர்வு தொடங்கிய நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. திருக்குறள் ஒன்றைக் கூறி உரையைத் தொடங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி, நிகழ்ச்சி தொடங்கும்போதும் முடியும்போதும் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்ற தொடர் கோரிக்கை புறக்கணிக்கப்படுகிறது என்று தெரிவித்தார். மேலும், தமிழ்நாடு அரசின் உரையின் பல பகுதிகளை ஏற்க முடியாது எனத் தெரிவித்து, ஆளுநர் உரையை வாசிக்காமல் புறக்கணித்துவிட்டு அமர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அதன் பின்னர், அரசு தயாரித்த உரை மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெறும், ஆளுநர் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்ற தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் முன்மொழிந்தார். அவை நடந்துகொண்டிருக்கும்போதே அங்கிருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். அதன் பின்னர் ஆளுநருக்கு எதிரான தீர்மானம் சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
இரண்டாம் நாள் நிகழ்வாக இன்று சட்டப் பேரவை கூடியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்துக்காக சட்டப் பேரவை இன்று கூடி நடைபெற்று வருகிறது. இதையடுத்து, கடந்த ஆண்டு உயிரிழந்த முக்கிய பிரமுகா்களின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிலையில், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு சட்டப் பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. மேலும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கு.க. செல்வம், துரை ராமசாமி உள்ளிட்டோருக்கும், முன்னாள் தமிழ்நாடு ஆளுநர் பாத்திமா பீவிக்கும் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.