#Kanguva படத்தை வெளியிட நிபந்தனையுடன் அனுமதி - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
நடிகர் சூர்யாவின் 'கங்குவா' படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி அளித்துள்ளது.
சூர்யா நடித்த ‘கங்குவா’ திரைப்படம் நாளை (நவ.14) ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில், மறைந்த அர்ஜுன் லால் என்பவரிடம் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் பெற்ற கடனை வசூலிப்பதற்காக சொத்தாட்சியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நவ.13க்குள் (இன்று) ரூ.20 கோடியை சொத்தாட்சியரிடம் செலுத்தாமல் கங்குவா படத்தை வெளியிடக் கூடாது என ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படியுங்கள் : NTR31 | ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாகும் பிரபல கன்னட நடிகை?
இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயசந்திரன், கார்த்திகேயன் அடங்கிய அமர்வு முன்பு இன்று (நவ.13) விசாரணைக்கு வந்தபோது நீதிமன்ற உத்தரவின்படி, ஒரு வழக்கில் ரூ.1.60 கோடியையும், மற்றொரு வழக்கில் ரூ.6.41 கோடியையும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், மீதி தொகையான ரூ.3.75 கோடியை டிச.11ம் தேதிக்குள் செலுத்துவதாக ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் உத்தரவாதம் அளித்தது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் டிச. 11க்குள் ரூ.3.75 கோடி செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் கங்குவா திரைப்படத்தை வெளியிட அனுமதி அளித்தனர்.