யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு நிபந்தனை ஜாமீன் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை - வேலூர் நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் அருகே தாமல் பகுதியில் வேகமாகவும், கவனக்குறைவாகவும், அபாயகரமாகவும் இரு சக்கர வாகனத்தை இயக்கி, விபத்துக்குள்ளானதாக பாலுச்செட்டி சத்திரம் போலீசார் பதிந்த வழக்கில், யூடியூபர் டிடிஎஃப் வாசன், செப்டம்பர் 19-ம் தேதி கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் 2-வது முறையாக மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வாசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அவரால் வாகனம் ஓட்ட முடியாது எனவும் கூறினார்.
மேலும், 40 நாட்களுக்கு மேல் சிறையில் இருப்பதால் ஜாமீன் வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வாசனுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதனையடுத்து, 3 வாரங்களுக்கு தினமும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டுமென நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.