#Puducherry-ல் இனி ஹெல்மெட் அணிவது கட்டாயம்... ஜன.1 முதல் அமலுக்கு வரும் ரூல்!
புதுச்சேரியில் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுச்சேரியில் கடந்த 2017ம் ஆண்டு மே மாதம் இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து கட்டாய ஹெல்மெட் திட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில் இரு சக்கர வாகன ஓட்டிகள் 2025 ஜனவரி 1 ம் தேதி முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று போக்குவரத்து போலீசார் உத்தரவிட்டுள்ளனர். இது தொடர்பாக போக்குவரத்து காவல்துறை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் பிரவீன்குமார் திரிபாதி சுற்றறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.
அதில், "புதுச்சேயில் கடந்த சில ஆண்டுகளில் இரு சக்கர வாகனங்கள் உள்பட பல்வேறு வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து உள்ளது. இதனால் அதிகரித்த வாகன பெருக்கம் மற்றும் பாதுகாப்பற்ற பயணத்தால் சாலை விபத்துகள், இறப்புகள் அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளது. இதில் ஹெல்மெட் அணியாததும் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
எனவே புதுச்சேரியில் மக்களுக்கு பாதுகாப்பு, சாலை விபத்துகளில் ஏற்படும் இறப்புகளைக் குறைக்கும் வகையில் போக்குவரத்து காவலதுறை, மிஷன் ஜீரோ பேட்டலிட்டி (ஜீரோ உயிரிழப்பு) திட்டத்தின் கீழ் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் ஹெல்மெட் பயன்பாட்டை கட்டாயமாக்குவதை தொடங்கவுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர் மத்தியிலும் போக்குவரத்து காவல்துறை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எனவே ஜனவரி 1ம் தேதி முதல் மோட்டார் வாகன சட்டப்படி ரூ.1000 அபராதம் மற்றும் 3 மாதத்துக்கு ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யும் நடவடிக்கையில் இருந்து தப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இரு சக்கர வானத்தில் பின்னால் அமர்ந்திருப்பவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன், போக்குவரத்து முதுநிலை காவல் கண்காணிப்பாளர் பிரவீன்குமார திரிபாதி ஆகியோர் சட்டசபையில் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து ஆலோசனை நடத்திய போது ஹெல்மெட் சட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.