குழந்தை வயிற்றில் தவறுதலாக டியூப் வைக்கப்பட்டதாக புகார் - மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் மறுப்பு!
குழந்தை வயிற்றில் தவறுதலாக டியூப் வைக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் இது தொடர்பாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் - மீனாட்சி தம்பதிக்கு நவம்பர் 14 ஆம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. மூச்சுத்திணறல், எடை குறைவு, சக்கரை குறைபாடு உள்ளிட்டவைகளுடன் குழந்தை பிறந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் 21 நாட்கள் பச்சிளம் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதன்பின் மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் ஆகி தங்களது சொந்த ஊரான முதுகுளத்தூருக்கு சென்றனர். குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று ஸ்கேன் எடுத்து பார்த்த பொழுது குழந்தைக்கு வயிற்றில் உணவுக்காக வைக்கப்பட்ட டியூப் அகற்றாமல் உள்ளது தெரிய வந்துள்ளது
இந்த நிலையில் இது தொடர்பாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் ரத்தினவேல் விளக்கம் அளித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது..
”குழந்தைக்கு அரசு ராஜாஜி மருத்துவமனையில் மீண்டும் ஸ்கேன் எடுக்கப்பட்டது. ஸ்கேன் அறிக்கையின்படி குழந்தையின் வயிற்றில் குழாயோ? வேறு வெளிப்பொருளோ இல்லை. தனியார் மருத்துவமனை டியூப் இருப்பதாக தவறாக அறிக்கை வழங்கியுள்ளது “ என மருத்துவமனை முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.