‘இந்தியன் 2’ படப்பிடிப்பு காட்சிகள் திருட்டுத்தனமாக வெளியிடப்படுவதாக புகார்!
‘இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் திருட்டுத்தனமாக வெளியிடப்படுவதாக தயாரிப்பாளர் தரப்பில் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘இந்தியன் 2’ . ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த், காளிதாஸ் ஜெயராம், பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, மறைந்த நடிகர்கள் விவேக், மாரிமுத்து, மனோபாலா என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இப்படத்துக்கு, அனிருத் இசையமைக்கவுள்ளார். லைகா ப்ரோடக்ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்புத் துவங்கியது. இதனிடையில் கொரோனா படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து என பலவிதமான சவால்களை படக்குழு சந்தித்துள்ளது. கடந்த நவம்பர் 3ஆம் தேதி இப்படத்தின் இண்ட்ரோ வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடம், இந்தி என பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் இந்தப் படத்தின் அறிமுக வீடியோவை அந்தந்த மொழிகளின் பிரபல நடிகர்கள் வெளியிட்டனர். இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் நடிகர் கமல்ஹாசனின் பகுதிகள் முழுவதுமாக படமெடுக்கப் பட்டதாக படக்குழு சார்பாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் படப்பிடிப்பு போது காட்சிகள் திருட்டுத்தனமாக வெளியிடப்படுவதாகவும், சமூக வலைதளங்களில் பரப்பக் கூடிய நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கக்கோரியும் புகாரளிக்கப்பட்டுள்ளது.