மலையாள ராப் பாடகர் வேடன் மீது என்ஐஏவிடம் புகார்!
மலையாள திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கடந்த சில நாள்களாக கஞ்சா வழக்கில் கைதாகி வருகின்றனர்.
அந்த வரிசையில் சமீபத்தில் பிரபல ராப் பாடகரான வேடன் (எ) ஹிரந்தாஸ் முரளியும் கஞ்சா பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
தொடர்ந்து புலி பல் டாலருக்காக வனத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இவர்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உள்துறை அமைக்ககம் மற்றும் என்ஐஏவிடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாலக்காடு நகராட்சி கவுன்சிலர் மினி கிருஷ்ணகுமார் என்பவர் புகார் அளித்துள்ளார்.
பாடகர் வேடன் கடந்த 2019ஆம் ஆண்டு பாடிய "குரலற்றவர்களின் குரல்" என்ற பாடலில் மத்திய அரசின் உச்சத்தில் இருப்பவர்களைப் பற்றி மறைமுகமாக விமர்சித்திருந்தார். புகாரில் இந்த பாடலை குறிப்பிட்டு, பிரதமரின் தனிப்பட்ட மற்றும் அரசியல் பிம்பத்தை அவமதிக்கும், ஆதாரமற்ற, அவமரியாதைக்குரிய மற்றும் புண்படுத்தும் கருத்துக்கள் பாடலில் இடம்பெற்றுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சாதியின் அடிப்படையில் சமூகத்தை பிளவுபடுத்தி வருவதாகவும், இவரது பின்னணி குறித்தும் விசாரணை செய்ய பாலக்காடு நகராட்சி கவுன்சிலர் மினி கிருஷ்ணகுமார் புகார் அளித்தார்.