மகா விஷ்ணு மீது தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார்!
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மகா விஷ்ணு மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை அசோக்நகர், சைதாப்பேட்டை பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களிடையே, மகா விஷ்ணு என்பவர் ஆன்மிக சொற்பொழிவு நடத்தியுள்ளார். தனியார் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த மகா விஷ்ணு, தன்னை உணர்தல் என்ற ரீதியில் மாணவர்களிடம் பேசியுள்ளார்.
கடந்த ஆக.28-ம் தேதி சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடம் பேசிய அவர், மாற்றுத்திறனாளிகள் கை, கால் இல்லாமல் பிறப்பதற்கு அவர்கள் முற்பிறப்பில் செய்த பாவம் தான் காரணம் என கூறியுள்ளார். தொடர்ந்து அசோக் நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும் கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டிருக்கிறது என பேசியுள்ளார். இப்படி பேச வேண்டாம் என மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர் கண்டித்தார்.
அதற்கு மகாவிஷ்ணு மைக்கில் பேசி அவரை அவமானப்படுத்தினார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் விசாரணை நடத்தி, இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என கூறியுள்ளார்.
இந்நிலையில் மகா விஷ்ணு மீது, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையிலும், அவர்கள் மனம் புண்படும்படியும், அறிவியலுக்கு மாறாக மகா விஷ்ணு சொற்பொழிவு ஆற்றி இருக்கிறார்.
இவரது பேச்சை மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான வன்செயலாக நாங்கள் கருதுகிறோம். எனவே இந்த மகாவிஷ்ணுவை மாற்றுத் திறனாளிகளுக்கு எதிரான வன்கொடுமை சட்டப்படியும், 2016 ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் படியும் கைது செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.