மது போதையில் கால்பந்து வீராங்கனைகள் மீது கொடூர தாக்குதல் - AIFF செயற்குழு உறுப்பினர் மீது புகார்!
அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் செயற்குழு உறுப்பினர் தீபக் சர்மா மீது இரண்டு கால்பந்து வீராங்கனைகள் புகார் அளித்துள்ளனர்.
ஹிமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த காட் எஃப்சி கிளப்பின் இரண்டு வீராங்கனைகள் மீது அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் செயற்குழு உறுப்பினர் தீபக் சர்மா தாக்குதல் நடத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய பெண்கள் கால்பந்தாட்டம் (Indian Women League) போட்டி கோவாவில் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் போட்டியின் கலந்துகொண்ட 7 பெண்களும் கோவாவில் உள்ள விடுதியில் தங்கியிருந்தனர். அப்போது விடுதி வளாகத்தில் குடிபோதையில் இருந்த சர்மா இரண்டு வீராங்கனைகளை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து தீபக் சர்மா மீது அவர்கள் புகார் அளித்துள்ளனர். புகாரில், இரவு சாப்பிட்டு விட்டு முட்டை வேகவைக்க சென்ற போது அங்கு வந்த சர்மா கடுமையாக தாக்கியதாக குறிப்பிட்டுள்ளனர்.
இச்சம்பவத்தின் போது அவர் மதுபோதையில் இருந்ததாகவும், ஹிமாச்சலிலிருந்து கோவாவிற்கு செல்லும் வழியிலேயே அவர் அனைவரின் முன்பும் மது அருந்தி வந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
தீபக் சர்மா ஹிமாச்சல் பிரதேஷ கால்பந்து சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், AIFF போட்டி குழுவின் துணைத் தலைவராகவும் இருப்பதும் குறிப்பிடதக்கது.