Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"தொடர் மழையால் மூழ்கிய பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்" - அன்புமணி ராமதாஸ்!

காவிரி பாசன மாவட்டங்களில் சேதமடைந்த பயிர்களை கணக்கிட்டு, அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
11:38 AM Oct 22, 2025 IST | Web Editor
காவிரி பாசன மாவட்டங்களில் சேதமடைந்த பயிர்களை கணக்கிட்டு, அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Advertisement

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன.

Advertisement

ஏற்கனவே, அறுவடை செய்யப்பட்ட குறுவை நெல், கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யப்படுவதற்கு முன்பாக மழையில் நனைந்து சேதமடைந்துள்ள நிலையில், இப்போது அறுவடைக்கு தயாராக உள்ள குறுவைப் பயிர்களும், நடவு செய்யப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடி பயிர்களும் தொடர் மழையில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன. இது உழவர்களுக்கு இரட்டைப் பேரிடியாக அமைந்திருக்கிறது.

காவிரி பாசன மாவட்டங்களில் மழை தொடர்ந்தால் குறுவை பயிர்கள் வயலிலேயே சாய்ந்து முளைக்கத் தொடங்கி விடும். சம்பா மற்றும் நெற்பயிர்கள் அழுகத் தொடங்கி விடும். இதனால் உழவர்களுக்கு ஈடு செய்ய முடியாத அளவுக்கு இழப்பு ஏற்படும். நடப்பாண்டில் குறித்த காலத்தில் குறுவை சாகுபடி பணிகள் தொடங்கியதால் நல்ல விளைச்சல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உழவர்கள் இருந்தனர். அறுவடைக்கு முன்பாக மழையால் பயிர்கள் சேதமடைந்தால் அவர்கள் செய்த முதலீடு அனைத்தும் வீணாகி பெரும் கடன் சுமையில் சிக்கிக் கொள்வார்கள். பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு போதிய இழப்பீடு வழங்குவதன் மூலமாக மட்டுமே உழவர்களைக் காப்பாற்ற முடியும்.

காவிரி பாசன மாவட்டங்களில் ஒன்றான மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் பெய்த கனமழையில் ஒன்றரை லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான நெற்பயிர்கள் சேதமடைந்தன. ஆனால், மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்த அதிகாரிகள் மொத்தம் 1.05 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றுக்கு ரூ.71.79 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு பரிந்துரை செய்தனர். அந்த இழப்பீட்டைக் கூட தமிழக அரசு இன்னும் வழங்காத நிலையில், அடுத்த பருவ மழையிலும் காவிரி பாசன மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் சிக்கிக் கொண்டிருக்கின்றன.

காவிரி பாசன மாவட்டங்களில் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என்றால், விவசாயிகள் கடனாளிகளாக மாறி விடுவார்கள். கடன் தான் விவசாயிகளின் தற்கொலைகளுக்கு முதன்மைக் காரணமாக அமைகிறது என்பதைக் கருத்தில் கொண்டு, காவிரி பாசன மாவட்டங்களில் சேதமடைந்த பயிர்களை கணக்கிட்டு, இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல்லையும் விரைந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Anbumani RamadossCompensationcrop damagePMKrains
Advertisement
Next Article