அதிக தேர்தல் பத்திரங்களை வாங்கிய ED, IT சோதனைக்கு உள்ளான நிறுவனங்கள்! சுவாரஸ்ய தகவல் இதோ!
2019 மற்றும் 2024-க்கு இடையில் அரசியல் கட்சிகளுக்கு அதிக நிதி வழங்கிய முதல் 5 பெரிய நிறுவனங்களில் 3 நிறுவனங்கள் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை சோதனைக்கு உள்ளாகியிருப்பது தெரிய வந்திருக்கிறது.
தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் திரட்டிய நிதி தொடர்பான விவரங்களை எஸ்.பி.ஐ வங்கி தேர்தல் ஆணையத்திற்கு அளித்த நிலையில், தற்போது அவ்விவரங்கள் வெளியாகியுள்ளன. மேலும், அரசியல் கட்சிகளுக்கும் நன்கொடை வழங்கிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களும் இடையேயான தொடர்பு குறித்த விவரங்களும் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில், 2019 மற்றும் 2024-க்கு இடையில் அரசியல் கட்சிகளுக்கு அதிக நிதி வழங்கிய முதல் 5 நிறுவனங்களில் 3 நிறுவனங்கள் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை (ஐ.டி) சோதனைக்கு உள்ளாகியுள்ளது. இது மட்டுமல்லாது தேர்தல் பத்திரம் வழங்கிய மேலும் சில நிறுவனங்களும் ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கும், புகார்களுக்கும் உள்ளானவை ஆகும்.
எஸ்.மார்டின்
நேற்று (14.03.2024) தேர்தல் பாத்திரங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட தரவுகளின் படி, 2019 முதல் 2024 வரை கோவையைச் சேர்ந்த லாட்டரி தொழிலதிபர் மார்ட்டினின் நிறுவனம் அதிகபட்சமாக 1,368 கோடி ரூபாய்க்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை அடிப்படையில், அமலாக்கத்துறை கடந்த 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், லாட்டரி மார்ட்டின் மற்றும் அவரது நிறுவனமான ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் (பி) லிமிடெட்க்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டம் 2002 இன் கீழ் விசாரணையைத் தொடங்கியது.
மார்ட்டினும் அவரது கூட்டாளிகளும், லாட்டரி ஒழுங்குமுறைச் சட்டம், 1998 இன் விதிகளை மீறியதாகவும், சிக்கிம் அரசை ஏமாற்றி ஆதாயத்தைப் பெற குற்றவியல் சதியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. "மார்ட்டினும் அவரது கூட்டாளிகளும் 01.04.2009 முதல் 31.08.2010 வரையிலான காலக்கட்டத்தில் லாட்டரி முறைகேடு மூலம் ரூ. 910.3 கோடி அளவுக்கு சட்டவிரோதமாக லாபம் ஈட்டியுள்ளனர்" என்று ஜூலை 22, 2019 அன்று அமலாக்கத்துறை அதன் அறிக்கையில் தெரிவித்தது.
இதனையடுத்து, அமலாக்கத்துறை அந்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள், மார்ட்டினின் நிறுவனத்திற்குச் சொந்தமான ரூ. 250 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்தது. மேலும், ஏப்ரல் 2, 2022 அன்று, இந்த வழக்கில் 409.92 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்களை பறிமுதல் செய்தது. இந்த சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்ட 5 நாட்களுக்குப் பிறகு, அதாவது ஏப்ரல் 7 ஆம் தேதி, மார்டினின் பியூச்சர் கேமிங் நிறுவனமானது ரூ.100 கோடி தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. மேலும், 2019-2024 காலகட்டத்தில், ரூ.1,350 கோடிக்கு மேல் தேர்தல் பத்திரங்களை வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
மேகா இன்ஜினியரிங்
அரசியல் கட்சிகளுக்கு இரண்டாவதாக அதிக நன்கொடை அளித்தவர்களில் ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்ட மேகா இன்ஜினியரிங் மற்றும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் லிமிடெட் (MEIL) உள்ளது. இந்த நிறுவனம் 2019 மற்றும் 2024 க்கு இடையில் ரூ 1000 கோடி மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியுள்ளது. கிருஷ்ணா ரெட்டியால் நடத்தப்படும், மேகா இன்ஜினியரிங் நிறுவனம் தெலங்கானா அரசாங்கத்தின் முக்கிய திட்டங்களை செயலாற்றி வருகிறது. குறிப்பாக, காலேஸ்வரம் அணை திட்டம், சோஜிலா சுரங்கப்பாதை மற்றும் போலவரம் அணையையும் அந்த நிறுவனம் கட்டி வருகிறது.
2019 அக்டோபரில், அந்த நிறுவனத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறையும் அதன் விசாரணையைத் தொடங்கியது. தற்செயலாக, அந்த ஆண்டு ஏப்ரல் 12 அன்று, மேகா இன்ஜினியரிங் நிறுவனம் ரூ. 50 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. இதனிடையே கடந்த ஆண்டு, சீன மின்சார கார் தயாரிப்பாளரான பி.ஒய்.டி (BYD) மற்றும் மேகா இன்ஜினியரிங் ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் 1 பில்லியன் டாலர் முதலீட்டில் அமைக்கப்பட இருந்த மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கான அனுமதியை தெலங்கானா அரசாங்கம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.
வேதாந்தா
அனில் அகர்வாலின் வேதாந்தா குழுமம் 376 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்களை வாங்கிய ஐந்தாவது பெரிய நன்கொடையாளர் ஆகும், இந்நிறுவனம் முதல் தவணை தேர்தல் பத்திரத்தை ஏப்ரல் 2019-இல் வாங்கியுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், 2018 ஆம் ஆண்டின் மத்தியில், சீனாவைச் சேர்ந்த சிலருக்கு விதிகளை மீறி விசா வழங்கிய லஞ்ச வழக்கில் வேதாந்தா குழுமத்திற்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை கூறியது. அமலாக்கத்துறையின் பரிந்துரையில் சி.பி.ஐ 2022 இல் ஊழல் வழக்கு பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறையும் பணமோசடி விசாரணையைத் தொடங்கியது.
இதனையடுத்து, ஏப்ரல் 16, 2019 அன்று, வேதாந்தா நிறுவனம் ரூ.39 கோடி மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியது. அடுத்த நான்கு ஆண்டுகளில், 2020 ஆம் ஆண்டின் கொரோனா காலக்கட்டத்தைத் தவிர, நவம்பர் 2023 வரை, அந்த நிறுவனம் ரூ. 337 கோடி மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியுள்ளது. வேதாந்தா வாங்கிய பத்திரங்களின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ. 376 கோடியாக உள்ளது.
நவயுகா இன்ஜினியரிங் கம்பெனி லிமிடெட்
ஆந்திராவை சேர்ந்த நவயுகா இன்ஜினியரிங் கம்பெனி லிமிடெட் நிறுவனம் மீது 2018-ஆம் ஆண்டு பண மோசடி மற்றும் வரி ஏய்ப்பு புகார் எழுந்த நிலையில், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. இதனை அடுத்து 2019 முதல் 2022-ஆம் ஆண்டுக்கு இடைபட்ட காலத்தில் இந்த நிறுவனம் ரூ.55 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது.
இந்த நிறுவனம் தான் 2023-ஆம் ஆண்டு கட்டுமான பணியின் போதே இடிந்து விழுந்த சில்க்யாரா சுரங்கப்பாதையை கட்டிய நிறுவனம். இந்த சுரங்கப்பாதையில் 41 தொழிலாளர்கள் 16 நாட்கள் சிக்கி தவித்தனர். இதே நிறுவனம் தான் மகாராஷ்டிராவில் சம்ருத்தி எக்ஸ்பிரஸ்வே சாலை கட்டுமான பணியையும் மேற்கொண்டது. இப்பணியின் போது நடந்த கோர விபத்தில் சிக்கி 17 தொழிலாளர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.