"வயநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடும்" - பினோய் விஸ்வம்
வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய இரு மக்களவை தொகுதிகளில் போட்டியிட்டார். இதையடுத்து, இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து வயநாடு தொகுதியின் எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார்.
ராகுல்காந்தியின் முடிவை தொடர்ந்து வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்தார்.
வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராகுல் காந்தி நேற்று (ஜூன் 18) அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா கடிதத்தை மக்களவை செயலகம் ஏற்றுக் கொண்டதாக தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், திருவனந்தபுரத்தில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் பினோய் விஸ்வத்திடம் வயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் மீண்டும் போட்டியிடுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, பதிலளித்த அவர், "இதில் சந்தேகமே தேவையில்லை. கேரளாவில் பாஜகவுக்கு சாதகமான எந்த விஷயத்தையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியோ இடதுசாரி ஜனநாயக முன்னணியோ செய்யாது. வயநாட்டில் நிச்சயமாக எங்கள் கட்சி போட்டியிடும்" என்றாா். இந்திய கம்யூனிஸ்ட் காங்கிரஸ் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.