Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“திமுக ஆட்சியில் ஜாதிய வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது” -மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு

05:44 PM Jul 13, 2024 IST | Web Editor
Advertisement

திமுக ஆட்சியில் ஜாதிய வன்கொடுமை தலைவிரித்து ஆடுவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது :

தமிழகத்தில், கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட கள்ளச்சாராய மரணம் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் படுகொலையால், பட்டியலின மக்களின் கடும் கோபத்திற்கு ஆளாகி இருக்கிறது திமுக அரசு..!

தமிழகத்தில் இறந்துபோன பட்டியலினத்தவரின் உடலுக்கு இறுதிச்சடங்கு கூட செய்ய முடியாத அவலம் போன்றவை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெரியவில்லை என்றால், நானே அழைத்துச் சென்று காட்டுகிறேன்..!

பட்டியலின மக்கள் வசிக்கும் அரசு மாணவர் விடுதியின் அவலம் சந்தி சிரிக்கிறது..!
படி உயர்வு, பரிசுத்தொகை உயர்வு என திமுகவின் கபட நாடகத்தை யாரும் நம்பப்போவதில்லை..!

ஜாதிய வன்கொடுமை தலைவிரித்து ஆடும் போலி திராவிட மாடல்
ஆட்சியில், இத்தனை அவலங்களை வைத்துக் கொண்டு ஆதி திராவிட மக்கள் நலன் காப்பதில் தமிழகம் முன்னணி என பொய் தம்பட்டம் அடிப்பதா..?

இந்தியாவிலேயே ஆதிதிராவிட மக்களின் நலன் காப்பதில், தமிழ்நாடு முன்னணி மாநிலமாக விளங்குவதாக கூறி தமிழக அரசு சார்பில் ஒரு மாய்மால அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், போலி திராவிட மாடல் திமுக அரசுக்கும் பட்டியலின மக்கள் மீது திடீர் பாசம் பொங்கி வழியத் தொடங்கி இருக்கிறதோ என்ற கேள்வியை எழுப்புகிறது. மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அடுத்தடுத்து நடந்து வரும் சம்பவங்களால் திமுக அரசு
தமிழக மக்களின் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 55-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த
சம்பவமும், உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பட்டியலின சமூகத்தை
சேர்ந்தவர்கள் என்பதும் தமிழகத்தில் மட்டுமின்றி தேசிய அளவில் பெரும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தின் மூலை
முடுக்கெல்லாம் பரவியுள்ள போதைப்பொருட்களின் புழக்கம் வெட்ட
வெளிச்சமாகி வருகிறது.

இந்தப் பேரதிர்ச்சி அடங்குவதற்குள், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள், தலைநகர் சென்னையில் அவரது வீட்டுக்கு அருகில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. ஒரு தேசியக்கட்சியின் மாநிலத் தலைவர் கொலையின் மூலம், தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சந்தி சிரித்து வருவதும் அம்பலமாகியுள்ளது.

கட்சிப் பாகுபாடுகளைக் கடந்து, தமிழகம் மட்டுமின்றி தேசிய அளவில் அனைத்துத் தரப்பினரும் இந்த படுகொலையை கண்டித்துள்ளதுடன், தமிழகத்தில் காவல்துறை என்று ஒன்று செயல்படுகிறதா என்ற கேள்வியையும் முன் வைத்து வருகின்றனர்.

தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிராக திமுக ஆட்சியில் தொடர்ந்து நடந்து வரும் கொடூரத் தாக்குதல், தமிழகத்தை தாண்டி, தேசிய பட்டியலின ஆணையத்தின் விசாரணையை எட்டியுள்ளது. அடுத்தடுத்து நடந்து வரும் இந்த சம்பவங்களால், தமிழக மக்கள், குறிப்பாக பட்டியலின மக்கள் போலி திராவிட மாடல் திமுக அரசின் மீது பெரும்கோபம் கொண்டுள்ளனர்.

இந்த பின்னணியில் பட்டியலின மக்களின் கோபத்தை தணிக்க ஏதாவது செய்ய முடியுமா என்ற நோக்கில் சில அறிவிப்புகளை திமுக அரசு வெளியிட்டுள்ளது. ஆனால், அவர்களது அறிவிப்புகள் அனைத்துமே எப்படிப்பட்ட மோசடி என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவர்.

பட்டியலின மக்களை ஏமாற்றி அவர்களை வாக்கு இயந்திரமாக பயன்படுத்தும் திமுகவின் கபட நாடகத்தை யாரும் நம்பப்போவதில்லை. ஜாதி வேறுபாடு இல்லாத மயானங்களை கொண்டுள்ள கிராமங்களில், மாவட்டத்திற்கு ஒரு கிராமம் என 37 முன்மாதிரி கிராமங்களில் வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்த தலா 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திராவிட மாடல் தமிழகத்தை மாற்றி விட்டதாக வாய் கிழியப் பேசும் திமுகவினருக்கு இதனை அறிவிக்க வெட்கமாக இல்லையா?

மற்ற பல மாநிலங்களை விடவும் ஜாதிய வன்கொடுமையும் தீண்டாமையும் இந்த திராவிட மாடல் ஆட்சியில் அதிகமாக தலைவரித்து ஆடுகிறது. பொது மயானத்தில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்களை புதைக்கவோ எரியூட்டவோ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது மட்டுமல்லாமல், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவரின் உடலை பொதுப்பாதையில் கொண்டு செல்ல முடியாத சூழல் நிலவுகிறது,

இறந்தவரின் உடலை சுமந்து கொண்டு மணிக்கணக்காக செய்வதறியாமல்
திகைத்துப்போய் தவிக்கும் பட்டியலின மக்களின் கண்ணீர் கதைகள்,
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் ஊடகங்களில் வெளி வந்த வண்ணம் உள்ளன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இவையெல்லாம் தெரியவில்லை என்றால், நானே அவரை அழைத்துச் சென்று இந்த அவலங்களைக் காட்டத் தயாராக இருக்கிறேன் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Tags :
BJPBy ElectionsDMKElection commissionelection resultsElections2024L MuruganNews7Tamilnews7TamilUpdatesNTKPMKTamilNaduvikravandiVikravandi By ElectionVikravandi ElectionVillupuram
Advertisement
Next Article