#Comet | வானில் நிகழும் அதிசயம்... பூமியை நெருங்கும் அரிய வால் நட்சத்திரம் - எப்போது பார்க்கலாம்?
வானில் தோன்றும் அதிசய நிகழ்வுகளுள் ஒன்றான வால் நட்சத்திரத்தை மீண்டும் அக்.12ம் தேதி பார்க்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாம் வாழும் இந்த பால்வெளி மண்டலம் பல்வேறு ஆச்சரியங்களையும் அதிசயங்களையும் கொண்டது. இதில் நடக்கும் பல மாற்றங்கள் நாம் வியந்து போகும் வகையிலேயே இருக்கும். அதில் ஒன்று தான் வானில் தோன்றும் வால்நட்சத்திரங்கள். சூரியனை கோள்கள் சுற்றி வருவது போல் ஏராளமான வால்நட்சத்திரங்களும் வலம் வருகின்றன. சூரியனை நீள்வட்டபாதைகளில் ஒவ்வொரு கோள்களும் சுற்றி வருகின்றன. அதேபோல் தூசி, கற்கள், பனிக்கட்டி உள்ளிட்டவை இணைந்த ஏராளமான கலவைகளும் சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. இதனை தான் வால்நட்சத்திரம் என்கிறோம்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சீனாவின் வானியலாளர்கள் தொலைநோக்கியின் உதவியால் ஒரு வால் நட்சத்திரத்தை கண்டுபிடித்தனர். இந்த வால்நட்சத்திரத்திற்கு Comet C/2023 A3 (Tsuchinshan-ATLAS) என பெயர் சூட்டப்பட்டது. இதன் சிறப்பு என்னவென்றால் இந்த வால் நட்சத்திரமானது அதன் சுற்றுப் பாதையை சுற்றி முடிக்க சுமார் 80 ஆயிரம் ஆண்டுகள் எடுத்துக் கொண்டுள்ளதாம். அதாவது இந்த வால் நட்சத்திரம் சுமார் 80,000 ஆண்டுகளாக நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகிறது.
கடந்த அக்.1ம் தேதி பெங்களூரு பகுதிகளில் சூரிய உதயத்திற்கு முன்னர் காட்சியளித்த இந்த வால்நட்சத்திரத்தை பலரும் படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தனர். இந்த வால் நட்சத்திரமானது சூரியன் வருவதற்கு முந்தைய நேரத்திலோ அல்லது சூரியன் மறையும் நேரத்திலோ தெரியும். சுமார் 80 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த வால் நட்சத்திரத்தை மீண்டும் அக்டோபர் 12 ம் தேதி பார்க்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.