உதகையில் பூத்துக் குலுங்கும் வண்ண ரோஜாக்கள் - குவியும் சுற்றுலாப் பயணிகள்!
உதகையில் பூத்துக் குலுங்கும் வண்ண ரோஜாக்களையும், இயற்கை அழகையும் கண்டுகளிக்க விடுமுறை தினமான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
இயற்கை எழில் கொஞ்சும் உதகையில் சாரல் மழை, மேகமூட்டம் என குளு குளு காலநிலை நிலவிவருகிறது. இந்த இதமான சூழலையும், அங்குள்ள இயற்கை அழகையும் கண்டுரசிக்க வார விடுமுறை நாட்களில் கேரளா, கர்நாடகா உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர்.
அந்த வகையில் விடுமுறை தினமான இன்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உதகையில் குவிந்து வருகின்றனர். பைக்காரா நீர்வீழ்ச்சியில் ஓடும் தண்ணீரை பார்த்து ரசிப்பதுடன், குடும்பம் குடும்பமாக செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர்.
இதனிடையே உதகை ரோஜா பூங்காவில் அரிய வகையில் பச்சைநிற ரோஜா பூக்கள் பூத்து குலுங்கியுள்ளன. மேலும் உலகப் புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில், கண்ணாடி மாளிகையில் பராமரிக்கப்பட்டு வரும் பிஸ் லில்லியம் மலர் செடிகளில் தற்போது பிஸ் லில்லியம் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இதனையும் சுற்றுலாப் பயணிகள் கண்டு மகிழ்கின்றனர்.
தலைகுந்தா பகுதியில் அமைந்துள்ள பைன் பாரஸ்ட் சுற்றுலா மையம் புலி நடமாட்டத்தால் நேற்று முன்தினம் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று திறக்கப்பட்டது. இங்குள்ள இயற்கை காட்சிகளையும் குடும்பம், குடும்பமாக சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.