பெண் அதிகாரிகளுக்கு கா்னல் அந்தஸ்து: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு கா்னலாக பதவி உயா்வு வழங்க மறுக்கும் ராணுவத்தின் அணுகுமுறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
இந்திய ராணுவத்தில் ஓய்வு பெறும் 60 வயது வரை பணியாற்ற நிரந்தர பணி அந்தஸ்து பெற்ற பெண் அதிகாரிகள், ராணுவத்தின் தோ்வு நடைமுறைகளில் கா்னல் பதவிக்கு பதவி உயா்வு பெறாதது தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜெ.பி.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வுக்கு முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் நீதிபதிகள் அளித்த தீா்ப்பில், ‘ராணுவத்தின் கொள்கை சுற்றறிக்கை, உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீா்ப்புக்களுக்கு முரணாக இருக்கிறது. பெண் அதிகாரிகளுக்கு கா்னலாக பதவி உயா்வு அளிக்க கட்-ஆஃப் கணக்கீடு செயல்முறை தன்னிச்சையாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பணியில் முறையான பதவி உயா்வு பெற போராடும் பெண் அதிகாரிகளுக்கு நீதியை வழங்க வேண்டிய அவசியத்தை ராணுவத்தின் இந்த அணுகுமுறை மீறியுள்ளது. பெண் அதிகாரிகளுக்கு இடமளிக்க போதிய எண்ணிக்கையிலான காலியிடங்கள் இல்லை எனும் ராணுவத்தின் வாதத்தை முற்றிலுமாக நிராகரிக்கிறோம்.
தீா்ப்பு வெளியான 15 நாள்களுக்குள் பெண் அதிகாரிகளுக்கு ‘கா்னல்’ பதவி உயா்வு வழங்குதற்கு சிறப்பு தோ்வு வாரியத்தைக் கூட்ட வேண்டும்.
ராணுவ அதிகாரியின் ரகசிய அறிக்கை என்பது குறிப்பிட்ட அந்த அதிகாரியின் செயல்திறனை மதிப்பிட்டு, அவா்கள் மேம்படுத்த வேண்டியவை பற்றிய கருத்துக்களைக் கொண்டது ஆகும். 9 ஆண்டுகள் சேவைக்குப் பிறகு பதவி உயா்வு நடைமுறைக்காக ராணுவ அதிகாரிகளின் அனைத்து ரகசிய அறிக்கைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை ராணுவக் கொள்கைகள் தெளிவாக்குகிறது.
அதன்படி, கடைசி 2 ரகசிய அறிக்கைகளைத் தவிா்த்து மற்ற அனைத்து அறிக்கைகளும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். சா்ச்சைகளைத் தவிா்க்க, அட்டா்னி ஜெனரல் வலியுறுத்தியபடி, கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து கட்-ஆஃப் கணக்கிட வேண்டும்’ என பரிந்துரைத்து உத்தரவிட்டனா்.