அரசு பேருந்தில் கல்லூரி மாணவர்கள் ரகளை; நடுவழியில் நின்ற பேருந்து!
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த ரெட்டிப்பாளையம் கிராமத்திலிருந்து வேலூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, கல்லூரி மாணவர்களின் தொடர் ரகளையால் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தால் பேருந்தில் பயணம் செய்த பொதுமக்களும், பயணிகளும் கடும் அவதிக்குள்ளாகினர்.
இன்று காலை, ரெட்டிப்பாளையத்திலிருந்து புறப்பட்ட அரசுப் பேருந்தில், கண்ணமங்கலம் வழியாகச் செல்லும் வழியில், கல்லூரி மாணவர்கள் சிலர் பேருந்தினுள் செல்ல மறுத்து படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணம் செய்துள்ளனர்.
இது குறித்து பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் பலமுறை எச்சரித்தும், மாணவர்கள் அவர்களது பேச்சைக் கேட்காமல் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
மாணவர்களின் அத்துமீறிய செயலால் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்த பேருந்து ஓட்டுநர், பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கண்ணமங்கலம் அருகே நடுவழியில் பேருந்தை நிறுத்தினார்.
இதனால், ஓட்டுநருக்கும், நடத்துநருக்கும் மாணவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மாணவர்களின் இந்தச் செயலால், பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தங்கள் இடங்களைச் சென்றடைய முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
மேலும் தினமும் இது போன்ற ரகளையில் கல்லூரி மாணவர்கள் ஈடுபடுவதாகப் பொதுமக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக, அரசுப் பேருந்துகளில் படிக்கட்டில் பயணம், பாட்டு சத்தம் போட்டு ரகளையில் ஈடுபடுவது, ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது போன்ற செயல்கள் வாடிக்கையாகிவிட்டதாகப் பயணிகள் வேதனை தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு, கல்லூரி மாணவர்களின் இத்தகைய அத்துமீறல்களைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.