உரிய இழப்பீடு வழங்காததால் மாவட்ட ஆட்சியரின் வாகனம் ஜப்தி!
தென்காசியில் விபத்தில் சிக்கியவருக்கு உரிய இழப்பீடு வழங்காததால் நீதிமன்ற பணியாளர்கள் ஆட்சியரின் வாகனத்தை ஜப்தி செய்துள்ளனர் .
தென்காசி மாவட்டம் தெற்குமேடு பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த நிலையில் தனக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் . இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய செங்கோட்டை ஊராட்சி ஒன்றிய வாகனம் மற்றும் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் வாகனத்தையும் வழக்கில் சேர்த்து, மனுதாரருக்கு ரூ.14 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தென்காசி முதன்மை சார்பு நீதிமன்ற நீதிபதி மாரீஸ்வரி உத்தரவு பிறப்பித்திருந்தார் .
இதையடுத்து நீண்ட காலமாக மனுத்தாரருக்கு இழப்பீடு தொகை செலுத்தாத நிலையில் ரூ.8 லட்சம் வட்டியை சேர்த்து ரூ.22 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். ஆனால் மனுதாரருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் இதுவரை ரூ. 19 லட்சம் மட்டுமே கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மீதமுள்ள ரூ.3 லட்சம் லட்சத்திற்கும் வட்டியுடன் சேர்த்து ரூ: 4,31,648 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் இல்லையென்றால் மாவட்ட ஆட்சியரின் வாகனம் ஜப்தி செய்யப்படும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர் . இதனால் மாவட்ட ஆட்சித் தலைவரின் வாகனத்தை நீதிமன்ற அலுவலக ஊழியர்கள் ஜப்தி செய்துள்ளனர் .