Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

உருக்குலைந்த சாலைகள் | திகிலூட்டும் பேருந்து பயணம் |  நியூஸ் 7 தமிழ் நடத்திய கள ஆய்வு...!

12:13 PM Jan 03, 2024 IST | Web Editor
Advertisement

உருக்குலைந்து போன சாலைகளால் அவதிப்படும் மலை கிராம மக்கள் குறித்து நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு நடத்தியுள்ளது. 

Advertisement

அதன் முழு விவரம் வருமாறு:

திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3500 அடி உயரத்தில் அமைந்துள்ளது தேயிலை தோட்டங்களை உள்ளடக்கிய மலை கிராமங்கள்.  இயற்கை வளங்களையும் எழில் மிகு அழகையும் தன்னகத்தே உள்ளடக்கி அமைந்துள்ள மாஞ்சோலை , நாலுமுக்கு,  காக்காச்சி ஊத்து உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளன.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக மணிமுத்தாறு முதல் குதிரை வெட்டி கோதையாறு என்று மலை உச்சத்திற்குச் செல்லும் அளவிற்கு சாலை அமைக்கப்பட்டது.  வளைவு நெளிவான குறுகலான சாலைகள் என்று கடினமான பயணம் என்றாலும் அதற்கு ஏற்றார் போல் சாலை அமைக்கப்பட்டது.

ஆனால்,  கடந்த வாரம் தென்மாவட்டங்களை புரட்டிப் போட்ட கனமழை,  10 ஆண்டுகளுக்கு முன்பு போட்ட சாலையை இருந்த இடம் தெரியாமல் உருக்குலைத்துவிட்டது.

இதனையடுத்து,   சாலை வசதி இல்லாமல் அவதிப்பட்டு வந்த மலைக்கிராம மக்களின் சிரமங்களை நியூஸ் 7 தமிழ் செய்தியாக வெளியிட்டு, அரசு நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சேர்த்தது.  அதன் எதிரொலியாகப் பேருந்து இயக்கத்திற்குத் தேவையான முதற்கட்ட அடிப்படை பணிகளை அரசு நிர்வாகம் மேற்கொண்டது.

அரசு போக்குவரத்துக் கழகம் பேருந்து இயக்கம் முன்வந்த நிலையில் தான் அம்பாசமுத்திரம், திருநெல்வேலி வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், துணை வட்டாட்சியர் என்று அரசு நிர்வாகம் ஒருங்கிணைந்து மலை கிராமங்களுக்கான போக்குவரத்து சேவையை தொடங்க முனைப்புடன் செயல்பட்டது.

ஆனால்,  கனமழையால் சாலை முழுவதும் உருக்குலைந்து காணப்பட்டன. மேலும், திகிலூட்டும் அந்த சாலையில் உயிரைப் பணயம் வைத்து நியூஸ் 7 தமிழ் செய்தியாளர்களும் பயணம் மேற்கொண்டனர்.  மணிமுத்தாற்றில் இருந்து புறப்பட்ட பேருந்து சுமார் 30 கிலோமீட்டர் 2:30 மணி நேரத்திற்கு மேலாக கடந்து சென்றடைந்தது. குறிப்பாக இயல்பான சூழலில் 10 லிட்டர் டீசலில் சென்று வர முடியும் என்ற சூழலில் தற்போது ஒருமுறை சென்று வருவதற்கு 25 லிட்டர் டீசல் தேவைப்படுவதாகப் போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இரு மடங்காக டீசல் இன் தேவை அதிகரித்துள்ள அதே வேளையில் பேருந்தில் ஏற்படும் தேய்மானத்தின் செலவினங்களும் அதிகரித்துள்ளது.

ஒருமுறை சென்று வந்தால் பேருந்தில் சுமார் ஐந்தாயிரம் வரை செலவினங்கள் ஏற்படுவதாகவும்,  இத்தனை பாதிப்புகள் ஏற்படுவதற்கு ஒரே காரணம் சாலை அமைத்து 10 ஆண்டுகள் ஆனது தான்.  தற்போது புதிய சாலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் கூட இது பல ஆண்டுகளாகச் சாலை அமைக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

தற்போதைய சூழலில் சாலை அமைக்க விடாமல் வனத்துறை கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது.  சாலை அமைக்காமல் இழுத்தடிக்கப்பட்டு வரும் இந்த சூழலில் பேருந்து இயக்கம் அதில் ஏற்படும் செலவினங்கள் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம் என்று மாஞ்சோலை மலை கிராமங்களில் இயல்பு நிலை முற்றிலும் மாறிப் போய் உள்ளது. இதற்கு ஒரே தீர்வு விரைந்து சாலை அமைத்து இயல்பான போக்குவரத்திற்கும் மக்களின் வாழ்வுக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

மலை கிராமங்களின் பாதிப்பு ஒரு புறம் என்றால் மலைக்கிராமங்களை முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வனத்துறையோ,  ஆண்டுதோறும் மாஞ்சோலை மணிமுத்தாறு அருவி மேலே உள்ள சுற்றுலாத்தலங்கள் என நல்ல வருவாயை ஈட்டி வரும் நிலையில் இதுபோன்று சாலைகளை அமைப்பதற்குத் தொடர்ந்து இடையூறாக இருப்பதற்கான காரணம் தான் இன்னும் கேள்வியாக இருக்கிறது.

வனத்துறை மூலம் இயக்கப்படும் வாகனங்களில் நாளொன்றுக்கு ஒரு நபருக்கு கட்டணமாக 350 ரூபாய் இது தவிர தனியார் வாகனங்கள் செல்வதற்கு வாகனங்களுக்கு 950 ரூபாய் மற்றும் தனிநபர்களுக்கான கட்டணம் என்று ஒரு நாள் ஒன்றுக்கு நல்ல வருவாயை ஈட்டி வரும் வனத்துறை அதற்கு பயன்படுத்தப்படும் சாலைகளுக்கு மேம்படுத்துவதற்கான செயல்பாடுகளுக்கு மட்டும் தொடர்ந்து இடையூறாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

சாலை அமைப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டும் கூட சாலை அமைப்பதற்குத் தடையில்லா சான்றை வழங்க வனத்துறை மறுத்துள்ளது.  வனத்துறை அதிகாரத்தின் ஆணவத்தில் ஆடுவதாக குற்றச்சாட்டும் மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.  மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைக்கப்பட்ட மணிமுத்தாறு பேரூராட்சியின் செயல்பாடுகளையும் மக்களின் நலத்திட்டங்களையும் செயல்படுத்த விடாமல் வனத்துறை தொடர்ந்து இடையூறாகச் செயல்பட்டு வருவதாகவும் மக்களுக்கான ஜனநாயக வழியை கடைப்பிடிக்காமல் வனத்துறை செயல்பட்டு வருவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.  வன விலங்குகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவமும் பாதுகாப்பும் கூட மனித ஜீவன்களுக்கு கொடுக்கப்படுவதில்லை என்ற ஆதங்கமும் இந்த பெருமழை வெள்ளத்தில் எழுந்திருக்கிறது.

Advertisement
Next Article