கோவை பாலியல் வன்கொடுமை விவகாரம் - 3 பேரை சுட்டுப்பிடித்த காவல்துறை!
கோவை விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பகுதியில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் கல்லூரி மாணவி ஒருவர் ஆண் நண்பர் வினித் என்பவருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த மூன்று இளைஞர்கள் வினித்தை கடுமையாக தாக்கி விட்டு கல்லூரி மாணவியை கடத்தி சென்றுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த வினித் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த பீளமேடு போலீசார் கல்லூரி மாணவியை தீவிரமாக தேடினர். அப்போது பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு நிர்வாண நிலையில் இருந்த மாணவியை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இது குறித்த விசாரணையில் மாணவியை கடத்தி சென்ற மூன்று இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தப்பி ஓடியது தெரியவந்துள்ளது. மேலும் இளைஞர்கள் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த வினித்தும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து தப்பி ஓடிய மூன்று இளைஞர்களையும் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 3 பேரை துடியலூர் அருகே தனிப்படை போலீசார் அதிரடியாக சுட்டுப்பிடித்துள்ளனர்.
துடியலூர் அருகே போலீசாரை தாக்கி விட்டு தப்பியோட முயன்ற குணா தவசி, சதீஸ், கார்த்திக் காளீஸ்வரன் ஆகிய 3 பேரையும் காலில் சுட்டுப்பிடித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து காலில் குண்டடிபட்ட 3 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.